திருவாடானை தொகுதியில் ‘என்ன வளர்ச்சிப் பணிகள் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை’ முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் பேச்சு


திருவாடானை தொகுதியில் ‘என்ன வளர்ச்சிப் பணிகள் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை’ முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் பேச்சு
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 15 May 2017 11:06 PM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தொகுதியில் ‘என்ன வளர்ச்சிப் பணிகள் நடக்கிறது

தொண்டி,

திருவாடானை யூனியன் சி.கே.மங்கலத்தில் பி.கே.மங்கலம் ஊராட்சி தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், மாவட்ட செயலாளர் திவாகரன், தலைமை கழக பேச்சாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் பேசியதாவது:– ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் கடும் வறட்சி நிலவுகிறது. பெண்கள் குடிநீருக்காக பல மைல் தூரம் அலைந்து கொண்டிருக்கும் அவல நிலை இருந்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் எந்தவித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் செயல் இழந்த ஆட்சி நடந்து கொண்டிருப்பதுதான்.

காவிரி கூட்டுக்குடிநீர்

இந்த மாவட்ட மக்கள் குடிநீருக்காக பட்ட துன்பங்களை போக்க தி.மு.க ஆட்சியில் ரூ.616 கோடியில் காவிரிகூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. இதனால் கடும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுஉள்ளது. திருவாடானை தொகுதியில் என்ன வளர்ச்சிப் பணிகள் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. சட்டமன்ற உறுப்பினர் எங்கே இருக்கிறார் என்றும் தெரியவில்லை. நான் திருவாடானை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளேன். அமைச்சராக இருந்த போது இந்த மாவட்டத்தில் இந்த தொகுதியில் ஏராளமான பணிகள் நடைபெற்றன.

இந்த மாவட்டத்திற்கு தி.மு.க ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரியை அ.தி.மு.க. அரசும், ஜெயலலிதாவும் வரவிடாமல் தடுத்துவிட்டனர். இதேபோல் திருச்சி–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையை தடுத்து இந்த மாவட்டத்திற்கு துரோகம் செய்தவர் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா.

மாட்டு வண்டி பந்தயம்

தி.மு.க. ஆட்சியில் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், தொண்டியில் அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிய துணை மின் நிலையங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுஉள்ளது. ஆனால் இன்று வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் கொடுக்க கமி‌ஷன் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் 3 மாதங்களுக்கு மேலாக டெண்டர் பெட்டி உடைக்கப்படாமல் வளர்ச்சி பணிகள் அனைத்தும் முடங்கி போய் விட்டது. அ.தி.மு.க.விற்கு நல்ல தலைமை இல்லை. இனி அந்த கட்சிக்கு ஆட்சியிலும் வாய்ப்பில்லை. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வலிமை பெற்றுள்ளது. தி.மு.க.வை இனி 50ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது. எனவே தமிழக மக்கள் எதிர்கால நலன் கருதி தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேஷ்கண்ணன், ஊராட்சி செயலாளர் சுரேந்திரன், பிரதிநிதி கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பெரியமாடு, நடுமாடு, கரிச்சான், பூஞ்சிட்டு என 4 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story