பழனியில், போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் மண்எண்ணெய் ஊற்றி கண்டக்டர் தீக்குளிக்க முயற்சி


பழனியில், போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் மண்எண்ணெய் ஊற்றி கண்டக்டர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 15 May 2017 10:15 PM GMT (Updated: 2017-05-16T00:35:02+05:30)

பழனியில் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, மண்எண்ணெய் ஊற்றி கண்டக்டர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி,

தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கழக தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழனி போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில், பழனி போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரியும் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜாபர்சாதிக் (வயது 52) என்பவரும் கலந்து கொண்டு கோஷமிட்டார். அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்தார். உடல் முழுவதும் மண்எண்ணெயை ஊற்றி தீவைக்க முயன்றார்.

பரபரப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் துரிதமாக செயல்பட்டு ஜாபர்சாதிக் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். பிறகு, அவர் மீது தண்ணீரை ஊற்றி, பாதுகாப்பாக அவரை மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெறிச்சோடிய பஸ் நிலையம்

இந்த வேலை நிறுத்தம் காரணமாக பழனியில் குறைவான பஸ்களே இயங்கியது. இதனால் பரபரப்பாக காட்சி அளிக்கும் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், பழனி கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல முடியாமல் பரிதவித்தனர். 

Next Story