பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்களே ஓடின


பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்களே ஓடின
x
தினத்தந்தி 15 May 2017 10:30 PM GMT (Updated: 2017-05-16T01:19:01+05:30)

பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: திருவள்ளூர் மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்களே ஓடின

திருவள்ளூர்

பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் ஓடின. கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் அருகே 2 மாநகர பஸ்கள் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தது.

குறைந்த பஸ்கள் இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர்கள் வற்புறுத்தி வந்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தமிழகம் முழுவதும் பஸ் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி, மாதவரம், பாடியநல்லூர், எண்ணூர், அம்பத்தூர், பூந்தமல்லி, ஆவடி, அய்யப்பன்தாங்கல், திருவொற்றியூர், திருவள்ளூர் ஆகிய அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து மொத்தம் உள்ள 951 பஸ்களில் 288 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.

திருவள்ளூரில் உள்ள பணிமனையில் இருந்து மொத்தம் உள்ள 58 பஸ்களில் 41 பஸ்கள் இயக்கப்பட்டன. வெளியில் இருந்து சில தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களை வரவழைத்து இந்த பஸ்கள் இயக்கப்பட்டது. தனியார் பஸ்களும் வழக்கம் போல் ஓடின. ஓடாத அரசு பஸ்கள், திருவள்ளூரில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

திருவள்ளூர் பணிமனையில் இருந்து பஸ்கள் இயங்குவதை நேற்று திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து பார்வையிட்டார். அவருடன் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, திருவள்ளூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளைமேலாளர் கே.ஸ்ரீதர், வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் காவேரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை பணிமனையில் மொத்தம் 40 பஸ்கள் உள்ளன. நேற்று 7 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். பஸ் பணிமனை எதிரே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால் ஷேர் ஆட்டோக்கள், வேன்களில் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி செல்லும் நிலை காணப்பட்டது.

பொன்னேரி

பொன்னேரி பணிமனையில் இருந்து 50 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று 35 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. மீதம் உள்ள 15 பஸ்களை இயக்குவதற்காக புதிதாக டிரைவர்கள், கண்டக்டர்களை பணியில் சேர்ப்பதற்காக நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் பொன்னேரி தொகுதி அ.தி.மு.க.(அம்மா) எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், சப்-கலெக்டர் தண்டபாணி, தாசில்தார் தமிழ்செல்வன், துணை தாசில்தார் ரஜினிகாந்த் ஆகியோர் பணிமனைக்கு நேரில் வந்து பஸ்கள் இயக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது விழுப்புரம் கோட்ட மேலாளர் சுகுமாறன், பொன்னேரி பணிமனை மேலாளர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலேயே பொன்னேரி பணிமனையில் இருந்துதான் அதிகளவிலான பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிதாக டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு மீதம் உள்ள பஸ்களையும் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story