அச்சரப்பாக்கம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது


அச்சரப்பாக்கம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2017 2:45 AM IST (Updated: 16 May 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

அச்சரப்பாக்கம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அச்சரப்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே உள்ள பருக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22). இவர் தனது உறவு பெண்ணான விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்த சரோஜினி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி காதலர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது துப்பட்டா சக்கரத்தில் சிக்கியதால் சரோஜினி கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

இதனால் மனமுடைந்த பார்த்திபன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சை பெற்று திரும்பிய பார்த்திபனை, கடந்த 12-ந் தேதி அச்சரப்பாக்கம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.

6 பேர் கைது

கொலையாளிகளை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பார்த்திபனை கொலை செய்ததாக ஒத்திவிளாகத்தைச் சேர்ந்த மதன் (28), செல்வம் (40), மரக்காணத்தைச் சேர்ந்த பிரகாஷ் (24), தினேஷ் என்கிற தினேஷ்குமார் (25), சுவேந்திரன் (25), சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (32) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், சரோஜினியின் அக்காள் கணவர் மதன் என்பதும், சரோஜினியை இரண்டாவதாக திருமணம் செய்ய மதன் விரும்பியதாகவும் தெரியவந்துள்ளது. சரோஜினியின் இறப்புக்கு காரணமாக இருந்ததால் பார்த்திபனை அவர் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கைதான 6 பேரும் செங்கல்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி, அரிவாள், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story