வரத்து அதிகரிப்பால் பருப்பு வகைகள், அரிசி, பாமாயில் விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் பருப்பு வகைகள், அரிசி, பாமாயில் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 16 May 2017 3:15 AM IST (Updated: 16 May 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

வரத்து அதிகரிப்பால் பருப்பு வகைகள், அரிசி, பாமாயில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில், பூண்டு, மிளகாய் வத்தல் விலை உயர்ந்துள்ளது.

சென்னை

தமிழகத்துக்கு, டெல்லி, அரியானா, மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து பருப்பு வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆண்டு, பருப்பு வகைகள் அதிக அளவு விளைச்சல் கண்டுள்ளதால், தற்போது அதன் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலையும் குறைந்து வருகிறது.

கடந்த மாதம் ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனையான துவரம் பருப்பு மூட்டை (100 கிலோ) தற்போது ரூ.7 ஆயிரமாக விலை குறைந்துள்ளது. இதனால், முதல் ரக துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.85-ல் இருந்து ரூ.75 ஆகவும், 2-வது ரக துவரம் பருப்பு ரூ.75-ல் இருந்து ரூ.65 ஆகவும் விலை சரிந்துள்ளது.

இதேபோல், கடந்த மாதம் ரூ.10 ஆயிரத்துக்கு விற்பனையான உளுந்தம் பருப்பு மூட்டை ரூ.9 ஆயிரமாக விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.105-ல் இருந்து ரூ.95 ஆகவும், பர்மா உளுந்தம் பருப்பு ரூ.95-ல் இருந்து ரூ.85 ஆகவும் விலை சரிந்துள்ளது. மேலும், பாசிப் பருப்பு ஒரு கிலோ ரூ.90-ல் இருந்து ரூ.75 ஆகவும், கடலை பருப்பு ஒரு கிலோ ரூ.90-ல் இருந்து ரூ.80 ஆகவும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து, வரத்து அதிகரித்து வருவதால், பருப்பு வகைகளின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்.

அரிசி விலையும் சரிவு

தமிழகத்தில் இந்த ஆண்டு வறட்சி நிலவி வந்த சூழ்நிலையிலும், தஞ்சாவூர், திருச்சி, காங்கேயம், ஈரோடு, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் பாய்ச்சி நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது, நெல் அறுவடை செய்யப்பட்டு, சந்தைக்கு புதிய அரிசி வரத் தொடங்கியுள்ளது. இதனால், அரிசி விலையும் சரிந்து வருகிறது.

25 கிலோ எடை கொண்ட ஐ.ஆர் - 50 அரிசி மூட்டை ரூ.850-ல் இருந்து ரூ.750 ஆகவும், ஐ.ஆர் - 20 அரிசி மூட்டை ரூ.900-ல் இருந்து ரூ.800 ஆகவும், ரூபாளி பொன்னி ரூ.950-ல் இருந்து ரூ.850 ஆகவும், அதிசய பொன்னி ரூ.1050-ல் இருந்து ரூ.950 ஆகவும், டீலக்ஸ் பொன்னி ரூ.1100-ல் இருந்து ரூ.1000 ஆகவும், பாபட்லா பொன்னி முதல் ரகம் ரூ.1300-ல் இருந்து ரூ.1200 ஆகவும், 2-வது ரகம் ரூ.1200-ல் இருந்து ரூ.1100 ஆகவும், வெள்ளை பொன்னி ரூ.1500-ல் இருந்து ரூ.1400 ஆகவும் விலை குறைந்துள்ளது.

மேலும் விலை குறைய வாய்ப்பு

இதேபோல், இட்லி அரிசி மூட்டை (25 கிலோ) முதல் ரகம் ரூ.1000-ல் இருந்து ரூ.900 ஆகவும், 2-வது ரகம் ரூ.900-ல் இருந்து ரூ.800 ஆகவும், பொங்கல் பச்சரிசி ரூ.800-ல் இருந்து ரூ.700 ஆகவும், பொன்னி பச்சரிசி (புதியது) ரூ.1050-ல் இருந்து ரூ.950 ஆகவும், பொன்னி பச்சரிசி (பழையது) ரூ.1350-ல் இருந்து ரூ.1250 ஆகவும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

பிரியாணி செய்ய பயன் படுத்தப்படும் பாசுமதி அரிசி முதல் ரகம் ஒரு கிலோ ரூ.110-ல் இருந்து ரூ.95 ஆகவும், 2-வது ரகம் ரூ.100-ல் இருந்து ரூ.80 ஆகவும், 3-வது ரகம் ரூ.80-ல் இருந்து ரூ.65 ஆகவும் விலை குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் புதிய அரிசி வரத் தொடங்கியுள்ளதால், அரிசி விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

மிளகாய் வத்தல் விலை உயர்வு

தற்போது, இந்தோனேசியா, மலேசியாவில் இருந்து பாமாயில் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், அதன் விலையும் குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.62-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பாமாயில் தற்போது ரூ.57 ஆக விலை சரிந்துள்ளது. இதேபோல், சன்பிளவர் ஆயில் முதல் ரகம் ரூ.85-ல் இருந்து ரூ.80 ஆகவும், 2-வது ரகம் ரூ.74-ல் இருந்து ரூ.69 ஆகவும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், வரத்து குறைவு காரணமாக காய்ந்த மிளகாய் (மிளகாய் வத்தல்), பூண்டு விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ரூ.300-க்கு விற்பனையான முதல் ரக காய்ந்த குண்டு மிளகாய் (ஒரு கிலோ) தற்போது ரூ.360 ஆகவும், 2-வது ரகம் ரூ.270-ல் இருந்து ரூ.300 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குண்டு மிளகாய், பரமக்குடி, விளாத்திகுளம், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் அதிகம் விளையும். ஆனால், இந்த ஆண்டு கடும் வறட்சியால் விளைச்சல் இல்லை. அதனால், விலையும் கூடியுள்ளது.

அதே நேரத்தில், ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகம் விளைச்சல் கண்டுள்ள நீட்டு மிளகாய் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ காய்ந்த நீட்டு மிளகாய் ரூ.100-ல் இருந்து ரூ.70 ஆக விலை சரிந்துள்ளது.

குஜராத், மத்தியபிரதேசம் மாநிலங்களில் இருந்து வரும் நாட்டு பூண்டின் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ நாட்டு பூண்டு முதல் ரகம் ரூ.50-ல் இருந்து ரூ.90 ஆகவும், 2-வது ரகம் ரூ.30-ல் இருந்து ரூ.60 ஆகவும், ஊட்டி மலைப்பூண்டு ரூ.90-ல் இருந்து 140 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. 

Next Story