போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: 85 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: 85 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் 85 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை.

தஞ்சாவூர்,

13–வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்திற்கு அரசே பொறுப்பேற்று அதை ஈடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்றுமுன்தினம் மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் 13 அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளன. தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள நகர்புற பணிமனையில் 124 டவுன் பஸ்கள் உள்ளன. நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலைக்கு செல்லாததால் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளை வைத்து 10 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மற்ற பஸ்கள் அனைத்தும் பணிமனையிலேயே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. கரந்தையில் உள்ள புறநகர் பணிமனையில் 56 பஸ்கள் உள்ளன. இவற்றில் 5 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

கலெக்டர்


அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் 22 பஸ்கள் உள்ளன. இவற்றில் எந்த பஸ்களும் இயக்கப்படாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த பணிமனைக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து 2 பஸ்கள் மட்டும் அங்கிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டன.

பட்டுக்கோட்டை பணிமனையில் இருந்து ஒரு பஸ்கள் கூட இயக்கப்படவில்லை. எல்லா பஸ்களும் பணிமனையிலேயே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை மாவட்டத்தில் 577 அரசு பஸ்கள் உள்ளன. இவற்றில் 93 பஸ்கள் மட்டுமே ஓடின. அதாவது 85 சதவீத பஸ்கள் ஓடவில்லை. மொத்தம் 3 ஆயிரத்து 336 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பஸ்கள் பெரும்பாலானவை இயக்கப்படாததால் பஸ் நிலையங்கள் எல்லாம் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக கிராமப்புற பகுதிகளுக்கு பஸ்கள் செல்லவில்லை. இதனால் கிராமத்தில் இருந்து தஞ்சை உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்ல முடியாமல் பஸ் நிறுத்தத்திலேயே நீண்டநேரம் காத்து இருந்தனர். அவர்கள் அந்த வழியாக வந்த வேன், இருசக்கர வாகனம் போன்றவற்றில் ஏறி பிற ஊர்களுக்கு சென்றனர்.

கூடுதலாக தனியார் பஸ்கள்


தனியார் பஸ்கள், மினிபஸ்கள் வழக்கம்போல் நகர்புற பகுதிகளில் இயக்கப்பட்டன. பழனி, கோவையில் இருந்து தனியார் பஸ்களும், மினிபஸ்களும் தஞ்சைக்கு வரவழைக்கப்பட்டு இயக்கப்பட்டன. கூடுதலாக 70 தனியார் பஸ்களும், 60 மினிபஸ்களும் இயக்கப்பட்டன. வேன்கள், ஷேர்ஆட்டோக்களிலும் பயணிகள் ஏற்றி செல்லப்பட்டனர். தஞ்சையில் இருந்து திருச்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. மதுரைக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் புதுக்கோட்டைக்கு சென்று அங்கிருந்து மதுரைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. தனியார் பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகஅளவில் இருந்தது. ஆனால் நேற்று ரெயில் மறியல் போராட்டம் ஆங்காங்கே நடைபெற்றதால் ரெயிலில் பயணம் செய்தவர்களும் சிரமத்திற்கு ஆளாயினர். இந்த போராட்டம் காரணமாக பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறை, போலீஸ்துறை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் பணிமனையிலும், பஸ் நிலையத்திலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல வட்டார அளவில் உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 13 போக்குவரத்து கழக பணிமனையிலும், 22 பஸ் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story