போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் 60 சதவீத அரசு பஸ்கள் ஓடின


போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் 60 சதவீத அரசு பஸ்கள் ஓடின
x
தினத்தந்தி 16 May 2017 4:00 AM IST (Updated: 16 May 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலியாக திண்டுக்கல் மாவட்டத்தில் 60 சதவீத அரசு பஸ்களே ஓடின. இதனால் வெளியூர் பயணங்களை பொதுமக்கள் பலரும் ஒத்திவைத்தனர்.

திண்டுக்கல்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்பட 10-க்கும் மேற்பட்ட சங்க ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

அன்றைய தினம் மாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க ஊழியர்கள் பஸ்களை பணிமனைக்கு கொண்டு சென்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மற்ற பஸ்களையும் பணிமனைக்கு கொண்டு வரும்படி போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இதனால், திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வத்தலக்குண்டு, நத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 8 பணிமனைகளுக்கும் பஸ்கள் கொண்டு செல்லப்பட்டன. தனியார் பஸ்கள் மட்டும் தொடர்ந்து இயங்கின.

பிச்சை எடுக்கும் போராட்டம்

ஆனால், காலையில் பணிமனைகளில் இருந்து அரசு பஸ்கள் ஒவ்வொன்றாக புறப்பட தொடங்கின. இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே, திண்டுக்கல் 2-வது பணிமனை முன்பு போராட்டக்காரர்கள் சிலர் பஸ்களை இயக்குவதை கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே போல, வத்தலக்குண்டு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து ஒரு அரசு பஸ் வெளியே வந்தது. அந்த பஸ்சை சில்வார்பட்டியை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டினார். அப்போது, அங்கு வந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பஸ்சை தடுத்து நிறுத்தி டிரைவரை கீழே இறங்குமாறு வற்புறுத்தினர்.

60 சதவீத பஸ்கள்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார், அனைவரையும் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரச்சினை செய்தால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 437 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், வேலை நிறுத்த போராட்டம் எதிரொலியாக அனைத்து பஸ்களையும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் தனியார் பள்ளி, கல்லூரி வாகன டிரைவர்களை வைத்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. காலையில் 20 சதவீதம் பஸ்கள் மட்டுமே இயங்கின. பிறகு, நேரம் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிறகு, 60 சதவீத அரசு பஸ்கள் வரை இயக்கப்பட்டன.

மாவட்டத்தில் பெரும்பாலான மலைக்கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக, கொடைக்கானல் மேல்மலை கிராமமான கவுஞ்சி, வில்பட்டி போன்ற பகுதிகளில் பஸ் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள மலைக்கிராம மக்கள் மிகுந்த பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.

மொத்தத்தில் இந்த வேலை நிறுத்த போராட்டம் மக்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

Next Story