மதுக்கடைகளை திறக்க கோரி மதுபிரியர்கள் போராட்டம், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை


மதுக்கடைகளை திறக்க கோரி மதுபிரியர்கள் போராட்டம், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை
x
தினத்தந்தி 16 May 2017 4:00 AM IST (Updated: 16 May 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

மதுக்கடைகளை திறக்க கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுபிரியர்கள் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொட்டாரெட்டிகுப்பம் கிராம எல்லையில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு சுற்றி உள்ள 10 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மதுக்கடை மூடப்பட்டது. ஆனால் அந்த கடையை மீண்டும் திறக்க கோரி தண்டலம், காக்கவாக்கம் பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் நேற்று முன்தினம் மதுக்கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி கலெக்டரிடம் மனு அளிக்கும்படி அவர்களை போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.

இதையடுத்து நேற்று தொட்டாரெட்டிகுப்பம், தண்டலம், காக்கவாக்கம், தும்பாக்கம், வண்ணான்குப்பம், ஆத்துப்பாக்கம், முக்கரம்பாக்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.

கூடுதல் செலவு

பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அளித்தனர். அதில் அவர்கள், “தொட்டாரெட்டிகுப்பம் கிராம எல்லையில் உள்ள மதுக்கடை மூடப்பட்டதால் நாங்கள் மதுபானம் வாங்க 7 முதல் 13 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பெரியபாளையம், தேர்வாய், ஊத்துக்கோட்டைக்கு செல்ல வேண்டியது உள்ளது. பஸ்சில் சென்றால் கூடுதல் செலவு ஆகிறது. வாகனங்களில் சென்றால் போலீசார் அபராதம் விதிக்கின்றனர். விபத்திலும் சிக்குகிறோம். இதனால் எங்களால் நிம்மதியாக குடிக்க முடியவில்லை. எனவே மூடப்பட்ட மதுக்கடையை திறக்க வேண்டும்” என கூறி இருந்தனர்.

இதேபோல் திருவள்ளூரை அடுத்த மெய்யூர் பகுதியை சேர்ந்த ஏராளமான மதுபிரியர்களும், மெய்யூர் கிராமத்தில் மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் இது தொடர்பான கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் வழங்கினர். 

Next Story