ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் உருவபொம்மையை எரிக்க முயற்சி பெண்கள் உள்பட 13 பேர் கைது


ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் உருவபொம்மையை எரிக்க முயற்சி பெண்கள் உள்பட 13 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2017 4:15 AM IST (Updated: 16 May 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி அருகே தஞ்சாவூர் சாலையில் ஒரு தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாகவும், இதனை கண்டித்தும், பயிற்சியை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி மத்திய பஸ் நிலையம் முன்பு புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் நேற்று காலை திரண்டனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். தேசிய தலைவர் மோகன்பகவத்தின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் எரிக்க முயன்ற உருவபொம்மையை போலீசார் பறித்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி பஸ் நிலையம் முன்பு திடீரென போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக கோஷமிட்டனர்.

13 பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் போராட்டத்தை கைவிட்டு கைதாக மறுத்து அவர்கள் சாலையில் படுத்தனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்தனர். போராட்டத்தில் பெண்கள் சிலரும் பங்கேற்றனர். பெண்களை பெண் போலீசார் கைது செய்ய முயன்ற போது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். இதில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் அருகில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story