போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 60 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 60 சதவீதம் அரசு பஸ்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் 60 சதவீதம் அரசு பஸ்கள் ஓடிவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

திருவாரூர்,

13–வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும். போக்குவரத்து துறையில் ஏற்பட்டு இருக்கும் நஷ்டத்திற்கு அரசே பொறுப்பேற்று அதை ஈடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துகழக தொழிற்சங்கங்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து அறிவித்த தேதிக்கு முன்னதாக ஒரு நாள் முன்கூட்டியே நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

60 சதவீத பஸ்கள் ஓடவில்லை


 திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 4 இடங்களில் பணிமனைகள் உள்ளன. இதில் திருவாரூரில் 72 பஸ்கள், மன்னார்குடியில் 76 பஸ்கள், திருத்துறைப்பூண்டியில் 61 பஸ்கள், நன்னிலத்தில் 36 பஸ்கள் ஆக மொத்தம் 245 நகர் மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் நேற்று 2–வது நாளாக நடந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் திருவாரூர்–30, மன்னார்குடி–31, திருத்துறைப்பூண்டி–15, நன்னிலம்–18 என மொத்தம் 94 பஸ்கள் ஓடின. 60 சதவீத பஸ்கள் ஓடவில்லை.

பயணிகள் அவதி


தனியார் பஸ்கள், மினி பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இருந்தபோதிலும் அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற் சங்கங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலை நிறுத்தப்போராட்டத்தால் அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் திருவாரூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதியது.


Related Tags :
Next Story