போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஒருசில அரசு பஸ்கள் ஓடின பயணிகள் அவதி


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஒருசில அரசு பஸ்கள் ஓடின பயணிகள் அவதி
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 4:00 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் நாகையில் ஒருசில அரசு பஸ்கள் மட்டும் ஓடின. இதனால் வெளியூருக்கு செல்லமுடியாமல் பயணிகள் தவித்தனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறை செய்யப்படும். அதன்படி 12–வது ஊதிய ஒப்பந்தகாலம் கடந்த ஆகஸ்டு மாதத்தோடு முடிவடைந்தது. அதைதொடர்ந்து 13–வது ஊதிய ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதம் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதை வழங்காமல் காலதாமதப்படுத்தி வருவதால், உடனே 13–வது ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவை தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியடைந்ததையடுத்து, 15–ந்தேதி முதல் (நேற்று) தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர்.

பேச்சுவார்த்தை தோல்வி


இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊதிய ஒப்பந்த பிரச்சினை குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. அதைதொடர்ந்து நாகையில் நேற்று முன்தினம் மாலை முதலே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒருசில அரசு பஸ்கள் ஓடவில்லை. தொடர்ந்து நேற்று காலை முதல் நாகையில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. ஒருசில பஸ்கள் மட்டுமே ஓடின. ஆனால் தனியார் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடின. வேலை நிறுத்தத்தால் நேற்று வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் அவதிப்பட்டனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாகையில் உள்ள வேளாங்கண்ணி, சிக்கல், நாகூர் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஆலயம், கோவில், தர்காவிற்கு வந்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதியுற்றனர்.

போலீஸ் குவிப்பு


போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அனைத்து அரசு பஸ்களும் நாகையில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் நாகை புதிய பஸ் நிலையம் அரசு பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. ஒருசில தனியார் பஸ்கள் மட்டுமே நின்றன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகை மண்டலத்தில் 11 பணிமனைகளும், விரைவு போக்குவரத்து கழகத்தில் ஒரு பணிமனையும் உள்ளன. இதில் நாகையில் உள்ள பணிமனையில் இருந்து 66 பஸ்கள் செல்லவேண்டிய நிலையில், நேற்று 21 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 42 பஸ்களில் 3 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. குறைந்த அளவே பஸ்கள் ஓடியதால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. இந்த வேலை நிறுத்தத்தால் பல்வேறு பணிகளுக்காக வெளியூர்களுக்கு செல்ல இருந்த பயணிகள் மாற்று வாகனங்கள் மூலம் சென்றனர்.போக்குவரத்து கழக பணிமனைகள் மற்றும் பஸ் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story