அரசு பஸ்கள் ஓடவில்லை: திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது


அரசு பஸ்கள் ஓடவில்லை: திருச்சி ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 16 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்கள் ஓடாததால் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

திருச்சி,

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு பஸ்கள் பெருமளவு இயக்கப்படவில்லை. திருச்சியில் நேற்று 95 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பஸ்கள் இல்லாத காரணத்தால் மத்திய பஸ் நிலையத்தில் தவித்த பயணிகள் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லா டிக்கெட் மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிகள் டிக்கெட் எடுத்து ரெயிலில் பயணம் செய்தனர்.

படிக்கட்டில் பயணம்

திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மதுரை, கரூர், புதுக்கோட்டை, சென்னை மார்க்கமாக இயக்கப்பட்ட பயணிகள் ரெயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் நிற்க கூட இடமின்றி பயணிகள் சிரமத்துடன் பயணம் செய்தனர். சில ரெயிலில் படிக்கட்டு வரை பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்ததை காணமுடிந்தது.

இதேபோல வெளியூர்களில் இருந்து ரெயில்களில் திருச்சிக்கு ஏராளமான பயணிகள் வந்து இறங்கினர். இதனால் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வழக்கமான பயணிகள் கூட்டத்தை விட அதிகமாக காணப்பட்டன. தெற்கு ரெயில்வே சார்பில் திருச்சி வழியாக இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

Related Tags :
Next Story