அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2–வது நாளாக வேலைநிறுத்தம் மாற்று டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கம்


அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 2–வது நாளாக வேலைநிறுத்தம் மாற்று டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 17 May 2017 3:00 AM IST (Updated: 16 May 2017 8:15 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில், 2–வது நாளாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில், 2–வது நாளாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் இயக்கப்படுவது குறித்து பழைய பஸ் நிலையத்தில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆய்வு நடத்தினார்.

வேலைநிறுத்தம்

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2–வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8 அரசு பஸ் டெப்போக்களில் இருந்து குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டன. அனைத்து பஸ்களையும் இயக்குவதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கனரக வாகன ஓட்டுனர் உரிமம், கண்டக்டர் உரிமம் பதிவு செய்தவர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். இதனால் நேற்று காலையில் ஏராளமானவர்கள் தூத்துக்குடியில் உள்ள அரசு பஸ் டெப்போவுக்கு வந்தனர். அவர்களிடம் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒரு படிவத்தை நிரப்ப செய்தனர். தொடர்ந்து பஸ்சை ஓட்டி செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதில் பலருக்கு வழித்தடம் தெரியாததால், உள்ளூருக்குள் பஸ்சை இயக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

 அதே போன்று கண்டக்டராக பணியாற்ற ஒரு இளம் பெண் நேற்று காலையில் அரசு பஸ் டெப்போவுக்கு வந்தார். ஆனால் அவரை அதிகாரிகள் தேர்வு செய்ய மறுத்து விட்டனர்.

மாற்று டிரைவர்கள்

நேற்று மாற்று டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அதே போன்று தனியார் பஸ் நிறுவனங்கள் போட்டி போட்டு பஸ்களை இயக்கி வருகின்றன. பெரும்பாலான மக்கள் தனியார் பஸ்களிலேயே பயணம் செய்து வருகின்றனர். மேலும், புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் இருந்து ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பஸ் டெப்போ முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் முருகன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மத்திய சங்க துணை செயலாளர் ஜான்கென்னடி மாணிக்கம், சி.ஐ.டி.யு.ரசல், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

 கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. நிர்வாகிகள் என்.எஸ்.பிள்ளை, ராமமூர்த்தி, செந்தில்குமார், தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி, ஏ.ஐ.டி.யு.சி. செந்தில்குமார், ராமமூர்த்தி, சரமாரியப்பன், கருப்பசாமி, சி.ஐ.டி.யு. சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 69 பஸ்களில் 43 பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில்பட்டியில் இருந்து 19 டவுன் பஸ்களும், 23 வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ரமேசன் தெரிவித்தார். தனியார் பஸ்கள், மினி பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 57 பஸ்களில் 31 பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனதாதள சங்க செயலாளர் பிரம்மநாயகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ராஜ்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி அண்ணாத்துரை, தொ.மு.ச. கந்தகுமார், முருகன், மாரியப்பன், குழந்தைவேல், சி.ஐ.டி.யு. ஜெயகுமார், சிவதாணுதாஸ், ம.தி.மு.க. செல்வராஜன், ஓய்வூதியர் சங்கம் தாஸ், ஜெயபாண்டி, சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 39 பஸ்களில் 21 பஸ்கள் இயக்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் அருகில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. சண்முகசுந்தரம், சி.ஐ.டி.யு. குமரகுருபரன், ஏ.ஐ.டி.யு.சி. சுடலைமுத்து, ஐ.என்.டி.யு.சி. சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 5 பஸ்களும் இயக்கப்பட்டன.

விளாத்திகுளம்

விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 38 பஸ்களில் 25 பஸ்கள் இயக்கப்பட்டன. விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. அருணாசலம், ஏ.ஐ.டி.யு.சி. கல்யாணசுந்தரம், சி.ஐ.டி.யு. ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து சீராக பஸ்கள் இயக்கப்படுகின்றனவா? என்பது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேற்று மதியம் ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து ஊர்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சிலர் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு நல்ல முறையில் கையாண்டு மக்களுக்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்தை சரி செய்து உள்ளது. மாவட்டத்தில் உள்ள 313 அரசு பஸ்களில் 202 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 100 சதவீதம் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறினார்.

ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் ரவிகுமார், சுந்தர்ராஜ் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story