தூத்துக்குடியில் நவீன கண்காணிப்பு கேமிரா கட்டுப்பாட்டு அறை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் திறந்து வைத்தார்


தூத்துக்குடியில் நவீன கண்காணிப்பு கேமிரா கட்டுப்பாட்டு அறை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 17 May 2017 2:30 AM IST (Updated: 16 May 2017 8:53 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நவீன கண்காணிப்பு கேமிராக கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின்கோட்னீஷ் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நவீன கண்காணிப்பு கேமிராக கட்டுப்பாட்டு அறையை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின்கோட்னீஷ் திறந்து வைத்தார்.

கட்டுப்பாட்டு அறை

தூத்துக்குடி நகரில் முக்கிய சந்திப்புகள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் 30 சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிதாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய 102 கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் 32 கேமிராக்கள் சுழலும் வகையை சேர்ந்தவை. இந்த கேமிராக்கள், தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நவீன கண்காணிப்பு கேமிரா போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு உள்ளன.

திறப்பு விழா

இந்த கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நேற்று காலையில் நடந்தது. விழாவுக்கு நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் கலந்து கொண்டு, நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். தொடர்ந்து கண்காணிப்பு கேமிராக்கள் செயல்படும் விதம் குறித்து பார்வையிட்டார்.

132 கேமிராக்கள்


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, ‘தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 132 கேமிராக்கள் இயங்கி வருகின்றன. நவீன டிஜிட்டல் கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் கேமிராவில் பதிவான சம்பவங்களை தெளிவாக பார்க்க முடியும்.

அதே போன்று தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு ரோட்டை பார்த்து வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராக்களை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கவும் முயற்சி நடந்து வருகிறது.

வழிப்பறி சம்பவங்களை...


இந்த கேமிராக்களை பொருத்தும் பணி நடந்த போதே, 2 வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேர் கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். வாகன விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காணவும், வாகன திருட்டுகளை தடுக்கவும் வாய்ப்பாக இருக்கும், என்ற கூறினார்.

Next Story