சித்தூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்


சித்தூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 10:08 PM IST)
t-max-icont-min-icon

சித்தூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சித்தூர்,

சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயலட்சுமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகந்தி, மாவட்ட இணை கலெக்டர் கிரீஷ், திருப்பதி மாநகராட்சி கமி‌ஷனர் ஹரிகிரண், மாவட்ட போக்குவரத்துத்துறை கமி‌ஷனர் ஸ்ரீதர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் பிரதியும்ணா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

உயிர் பலிகள்

சித்தூர் மாவட்டத்தில் மொத்தம் 600 கிலோ மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. 1000 கிலோ மீட்டர் தூரத்துக்கு மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. அதில் ஏராளமான உயிர் பலிகள் ஏற்படுகின்றன. திருப்பதி–நாயுடுபேட்டை, சென்னை–பெங்களூரு, பலமநேர்–பூதலப்பட்டு ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. இந்தத் தேசிய நெடுஞ்சாலைகளில் வாரத்தில் 2–லிருந்து 3 விபத்துகள் நடக்கின்றன.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்துத்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துகள் நடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும். சாலைகளின் வளைவுகளில் எச்சரிக்கை பலகையை வைக்க வேண்டும். விபத்து நடக்கும் பகுதியில் சாலையை சற்று விரிவாக்கம் செய்யலாம். விபத்துகளை தடுக்க சாலை ஓரமும், சாலையை ஒட்டி உள்ள மரங்களின் மீதும் ஒளியை பிரதிபலிக்கும் விளக்குகளை பொருத்த வேண்டும்.

சித்தூர்–நாயுடுபேட்டை வரை 6 வழி சாலையாக அமைக்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சித்தூர்–பூதலப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஓரம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி விட வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஓரம் புதர் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story