போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் மீறுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு


போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் மீறுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 10:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்

மதுரை,

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்தவர் செந்தில்குமரையா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் அரசு பஸ்களின் சேவையைத்தான் நம்பி உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களால் 47 தொழிற்சங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் புதிய ஊதிய ஒப்பந்தம், தொழிலாளர் நல நிதி வழங்குவது என பல்வேறு கோரிக்கைகளை வற்புறுத்தி, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து 2 நாட்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். 2 நாட்களாக தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. 90 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு பஸ்கள் தான் சென்று வந்தன. 2 நாட்களாக கிராமங்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தற்காலிக பணியாளர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. போராட்டத்தில் ஈடுபடாமல் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது தொழிற்சங்கத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

பணிக்கு திரும்ப உத்தரவிட வேண்டும்

பஸ்களை முழுமையாக இயக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்தும், தமிழகம் முழுவதும் தடையில்லா, பாதுகாப்பான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தவும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

அதற்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் தாமாக முன்வந்து பணி செய்பவர்களை தடுப்பவர்கள் மீது எஸ்மா சட்ட்த்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

அவசர வழக்காக விசாரணை

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் சார்பில் கோரப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த வழக்கை நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.சே‌ஷஷாயி ஆகியோர் நேற்று அவசர வழக்காக எடுத்து விசாரித்தனர்.

விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரச்சினை என்பதால் மத்திய அரசு தலையிட முடியாது’’ என்று குறிப்பிட்டார்.

மாநில அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நட்த்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களது போராட்டம் சட்ட விரோதமானது’’ என்று வாதாடினார்.

அரசு ஒப்புதல்

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

அரசு வக்கீல் கூறியதுபோல போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு ஒத்துக்கொண்டுள்ளது. அதன்படி பல்வேறு அரசாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை 50 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை 3 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று அரசு கூறியுள்ளது. அதன்பிறகு போராட்டம் நடத்துவது முறையற்றது. சில தொழிலாளர்கள் பணியாற்றுவதை தடுக்க தொழிற்சங்கத்தினருக்கு எந்த அதிகாரமும் இல்லை. பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அளவில்லாத துன்பத்தை சந்திப்பதை கோர்ட்டு பார்த்துக்கொண்டு இருக்காது. எனவே கீழ்க்கண்ட உத்தரவை சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டும்.

அதாவது, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனம் (ஏ.ஐ.டி.யூ.சி.), தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் பேரவை (எச்.எம்.எஸ்.), தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் சம்மேளனம் (டி.டி.எஸ்.எப்.), தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை (டி.எம்.டி.எஸ்.பி.), மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (எம்.எல்.எப்.), பாட்டாளி தொழிற்சங்க பேரவை (பி.டி.எஸ்), அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி (ஏ.ஏ.எல்.எல்.எப்.), திராவிடர் தொழிலாளர் கழக பேரவை (டி.டபுள்யூ.யூ) ஆகிய தொழிற்சங்கத்தினர் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

எஸ்மா சட்டம்

தவறுபவர்கள் மீது தமிழக தலைமை செயலாளர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கையும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பான அறிக்கையை தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஐகோர்ட்டில் நாளை (அதாவது இன்று) காலை 10.30 மணியளவில் தாக்கல் செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் நாளை (அதாவது இன்று) நேரில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story