கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2–வது நாளாக அரசு பஸ்கள் இயங்காததால் கிராம மக்கள் கடும் அவதி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2–வது நாளாக அரசு பஸ்கள் இயங்காததால் கிராம மக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 16 May 2017 10:58 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2–வது நாளாக அரசு பஸ்கள் இயக்கப்படாததால் கிராமப்புற மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

கிருஷ்ணகிரி,

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 2–வது நாளாக போராட்டம் நீடித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக கிராமப் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாததால், தினமும் நகர பகுதிக்கு வேலைக்கு வருபவர்கள், கல்லூரி மற்றும் பள்ளிகளில் சேர விண்ணப்பம் பெற இருந்த மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனர். விவசாய பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் அரசு பஸ்களை தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பஸ் டிரைவர்களை கொண்டு இயக்கினர். ஆனால் அதில் 30 சதவீத பஸ்கள் கூட இயக்கப்படவில்லை. அவ்வாறு இயக்கப்பட்ட பஸ்கள் நகர பகுதிகளுக்கு மட்டுமே சென்று வந்தன. இதனால் தனியார் பஸ்கள், டூரிஸ்ட் பஸ்கள், மினி பஸ்கள் இஷ்டப்படி கட்டணத்தை வசூல் செய்ததாக பொதுமக்கள் புகார் கூறினார்கள்.

50 சதவீத பஸ்கள் இயக்கம்

இதையடுத்து அனைத்து அரசு பஸ்களையும் எவ்வாறு இயக்க வேண்டும் என்பது குறித்து நேற்று முன்தினம் மாலை மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார், போக்குவரத்து துறையினர் திடீரென ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அதில், தற்காலிகமாக பஸ்களை இயக்க டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை நியமனம் செய்வது என முடிவு செய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டனர். அதன்படி நேற்று காலை முதல் பிற்பகல் வரை தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அந்தந்த பஸ் டெப்போக்களில் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கிடையே 2–வது நாளாக நேற்று பிற்பகல் வரை பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படாமல் டெப்போக்கள் மற்றும் பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் புதியதாக நியமனம் செய்யப்பட்ட டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை கொண்டு பஸ்கள் இயங்க தொடங்கின. இதன்படி 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆனாலும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் புதிய டிரைவர்கள் ஓட்டிய பஸ்களில் பயணிகள் ஏற தயக்கம் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. மலை கிராமங்கள் அதிகம் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தனியார் பஸ்களிலும், சரக்கு வாகனங்களிலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஏறி சென்றனர்.

Next Story