வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் புதிய அறுவை சிகிச்சை மையம்


வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் புதிய அறுவை சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 17 May 2017 12:40 AM IST (Updated: 17 May 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய அறுவை சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

விருதுநகர்,

வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மீனாட்சிபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடங்கி வைத்ததோடு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அறுவைசிகிச்சை மையம் மற்றும் கோட்டையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு பிரிவு கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏழை, எளிய மக்கள் தரமான மருத்துவ சிகிச்சையினை பெறும் வகையில் முதல்- அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் மூலம் விலையில்லா காப்பீட்டு திட்டத்தினை செயல் படுத்தினார்கள். மாவட்டத்தில் பல்வேறு ஆரம்பசுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி மீனாட்சிபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி வைக்கப்படுகிறது.

16 வகை பொருட்கள்

அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில் 16 வகையான பொருட்கள் உள்ளன. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் ராதாகிருஷ்ணன் (விருதுநகர்), வசந்தி முருகேசன் (தென்காசி), மற்றும் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மருத்துவ பணிகள் இணை இயக்குனர் துரைராஜ், சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கலுசிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story