சாலை அமைப்பு பணியில் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரு மாதத்துக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


சாலை அமைப்பு பணியில் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரு மாதத்துக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 May 2017 12:42 AM IST (Updated: 17 May 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

வச்சக்காரப்பட்டி கிராம பஞ்சாயத்தில் சாலை அமைப்பு பணியில் நடைபெற்ற முறைகேடு

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரை சேர்ந்த செந்தில் விநாயகம் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், வச்சக்காரப்பட்டி கிராம பஞ்சாயத்தில் 2014-15-ம் நிதியாண்டில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் பூசாரிப்பட்டி, தடங்கம், ஆர்.எஸ்.ஆர்.நகர், அக்கரகாரப்பட்டி, சண்முகசுந்தரபுரம் ஆகிய கிராமங்களில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியில் ரூ.51 லட்சம் வரை முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டருக்கும், மாவட்ட திட்ட இயக்குனருக்கும் பல முறை புகார் மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படாததால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், கிராம வளர்ச்சி நிர்வாக என்ஜினீயர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

விசாரணை

இந்த மனு நீதிபதி ஏ.செல்வம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஏற்கனவே இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை நடந்த முறைகேடு தொடர்பானது என மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டதுடன் இந்த மனுவில் தெரிவித்துள்ள புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

உத்தரவு

இதனை தொடர்ந்து மனுதாரர் இது பற்றிய புகாரை விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் அளிக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி ஏ.செல்வம் உத்தரவிட்டார்.

Next Story