பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2017 4:15 AM IST (Updated: 17 May 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

நாகை, கீழ்வேளூர் பகுதிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாகை வட்டக்குழு சார்பில், விவசாயிகளுக்கு 2015-16, 2016-17 ஆண்டுகளுக்குரிய பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்கக்கோரி நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், மாநில குழுவை சேர்ந்த சரபோஜி ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு 2015-16, 2016-17 ஆண்டுகளுக்குரிய பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். நிவாரணம் மற்றும் காப்பீட்டு தொகையை வெளிப்படையாக வழங்க வேண்டும். மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் விவசாய சங்கத்தை சேர்ந்த தங்கையன், பாபுஜி, சுப்பிரமணியன், சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்வேளூர்

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கீழ்வேளூர் ஒன்றிய குழு சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வதுரை, அப்பாசாமி, யூசுப், சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் மகாலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story