வரதராஜன்பேட்டையில் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்


வரதராஜன்பேட்டையில் டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2017 4:15 AM IST (Updated: 17 May 2017 3:02 AM IST)
t-max-icont-min-icon

வரதராஜன்பேட்டையில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரதராஜன்பேட்டை,

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆண்டிமடம் சுற்றுவட்டார பகுதியில் சாலையோரம் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் வரதராஜன்பேட்டையில் சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடை மட்டும் அகற்றப்படாமல் உள்ளது.

இந்நிலையில் நேற்று வரதராஜன்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்கள் அக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். ஆண்கள் இங்கு மதுபானம் அருந்த வந்தால், நாங்களும் மது அருந்துவோம் என கோஷமிட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், வேலுச்சாமி, ராமலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பதை புகார் மனுவாக எழுதி மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் கலால் துறையிடம் கொடுங்கள். அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story