பள்ளி மாணவன் கடத்திக் கொலை மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு


பள்ளி மாணவன் கடத்திக் கொலை மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு
x
தினத்தந்தி 17 May 2017 4:45 AM IST (Updated: 17 May 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

கே.ஆர்.பேட்டை டவுனில் பள்ளி மாணவனை மர்மநபர்கள் கடத்தி, கொலை செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மண்டியா,

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை டவுனைச் சேர்ந்தவர் லோகேஷ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சுஜாதா. இவர் பொம்மேனஹள்ளி பகுதியில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் ‌ஷசாங்(வயது 14). இவன் தேகனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது அவன் ஆண்டுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் லோகேஷ் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றான். ஆனால் அவன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ‌ஷசாங்கின் பெற்றோர் அவனை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.

இறந்து கிடந்தான்


இதனை தொடர்ந்து ‌ஷசாங் மாயமாகி விட்டதாகவும், அவனை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் லோகேஷ் கே.ஆர்.பேட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ‌ஷசாங்கை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் கே.ஆர்.பேட்டை டவுன் ஹேமகிரி சாலையில் உள்ள அரசு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சிறுவன் ஒருவன் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கே.ஆர்.பேட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அந்த சிறுவன் மாயமான ‌ஷசாங் என்பது தெரியவந்தது. மேலும் அவன் வாயில் ரத்தம் வடிந்து இருந்ததால் அவனை யாரோ கடத்தி வந்து, அடித்து–உதைத்து வாயில் வி‌ஷத்தை ஊற்றி கொலை செய்து உடலை, அரசு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வீசிச்சென்றது தெரியவந்தது.

கொலை


இதுபற்றி அறிந்த மண்டியா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதீர்குமார் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ‌ஷசாங்கின் உடலை பார்வையிட்டார். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் ‌ஷசாங் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் ‌ஷசாங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.ஆர்.பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் ‌ஷசாங்கின் வாயில் வி‌ஷத்தை ஊற்றியும், கழுத்தை நெரித்தும் மர்மநபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

தனிப்படை அமைப்பு


‌ஷசாங்கை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சுதீர்குமார் குமார் ரெட்டி கூறினார். இதுகுறித்து கே.ஆர்.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story