நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2017 4:30 AM IST (Updated: 17 May 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

அரசு போக்குவரத்துக்கழக ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தி.மு.க., கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. கட்சிகளின் தொழிற்சங்கங்கள், எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 14–ந் தேதி மாலையில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நேற்று 3–வது நாளாக தொடர்ந்தது.

இந்தநிலையில் நேற்று காலை நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அலுவலகம் முன்பு தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எம்.எல்.எப்., எச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திடீரென திரண்டனர். ஏற்கனவே ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆர்ப்பாட்டம்

இதற்கிடையே தொழிற்சங்கத்தினர் திரண்டதால், இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் தொழிற்சங்கத்தினர் சார்பில் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாவட்ட தலைவர் சிவன்பிள்ளை, ஏ.ஐ.டி.யு.சி. தயானந்தன், சி.ஐ.டி.யு. சங்கரநாராயணன், அந்தோணி மற்றும் அண்ணாதுரை, சவுத்திரி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். தொ.மு.ச. மாவட்ட செயலாளர் இளங்கோ ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். நிர்வாகிகள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தியும், வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாகவும் பேசினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோ‌ஷங்களும் எழுப்பப்பட்டன. தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ராணித்தோட்டத்தில் உள்ள பொதுமேலாளர் அலுவலகம் முன்புறம் உள்ள சாலை வரை திரண்டு நின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.


Next Story