திருச்சியில் 20–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் நெல்லை இளைஞர்களுக்கு வாய்ப்பு


திருச்சியில் 20–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம் நெல்லை இளைஞர்களுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 18 May 2017 1:30 AM IST (Updated: 17 May 2017 8:04 PM IST)
t-max-icont-min-icon

இந்திய விமானப்படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் திருச்சியில் வருகிற 20–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடைபெறுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.

நெல்லை,

இந்திய விமானப்படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் திருச்சியில் வருகிற 20–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடைபெறுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

ஆட்சேர்ப்பு முகாம்

இந்திய விமானப்படையில் பணிபுரிய துடிப்பும், துணிவும், ஆர்வமும் உள்ள திருமணமாகாத ஆண்கள் குரூப் ‘ஒய்’ பிரிவில் (தொழில்நுட்பம் இல்லாதது) சேர்க்கப்பட உள்ளனர்.

இதையொட்டி திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் வருகிற 20–ந்தேதி (சனிக்கிழமை) முதல் 24–ந்தேதி வரை காலை 6 மணி முதல் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

நெல்லை இளைஞர்கள்

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கான குரூப் ‘ஒய்’ பிரிவிற்கு ஆட்சேர்ப்பு வருகிற 20–ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 6 மணி முதல் 10 மணிக்குள் வருபவர்களுக்கு மட்டுமே எழுத்துத்தேர்வு மற்றும் தகுதித்தேர்வு–1ம் நடைபெற உள்ளது. 20–ந்தேதி நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்களுக்கு அடுத்தநாள் 21–ந்தேதி உடல்திறன் தேர்வு மற்றும் தகுதித்தேர்வு–2ம் நடைபெற உள்ளது.

குரூப் ‘ஒய்’ (Automobile Technician, GTI மற்றும் IAF (Police)) பிரிவிற்கு பிளஸ்–2 தேர்வில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களுடன் படித்து குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். மேலும் 7.7.1997 முதல் 20.12.2000–க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

சான்றுகள்

இந்த தகுதியும் விருப்பமும் உள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், எழுதுபொருள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் (மார்புக்கு முன்னால்) சிலேட் கரும்பலகையில் பெயர் மற்றும் தேதி ஆகியவற்றை சரியாக குறிப்பிட்டு எடுக்கப்பட்ட 7 வண்ண புகைப்படங்கள், அனைத்து அசல் மற்றும் தலா 4 ஜெராக்ஸ் கல்விச்சான்றுகள், மதிப்பெண் பட்டியல், அசல் இருப்பிடச்சான்று, என்.சி.சி. சான்று (இருப்பின்) ஆகியவற்றுடன் வருகிற 20–ந்தேதி காலை 6 மணிக்கு திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்துக்கு சென்று ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

இதில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம், தங்களது தகுதியை மட்டுமே நம்பி தேர்வுக்கு செல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044–22390561 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் கருணாகரன் தெரிவித்து உள்ளார்.

Next Story