மரம் விழுந்ததால் ரெயில் தடம் புரண்டது தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்


மரம் விழுந்ததால் ரெயில் தடம் புரண்டது தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 May 2017 3:45 AM IST (Updated: 17 May 2017 10:44 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே பழமையான மரம் விழுந்ததால் ரெயில் தடம் புரண்டது. தொடர்ந்து நேற்று தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை


புனேயில் இருந்து நெல்லைக்கு கடந்த மாதம் 2–ந்தேதி முதல் கோடை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் பொள்ளாச்சி வழியாக இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் நேற்று முன்தினம் காலை 7.20 மணிக்கு நெல்லையில் இருந்து புனேக்கு புறப்பட்டது. என்ஜின் கோளாறு காரணமாக மதியம் 2 மணிக்கு பொள்ளாச்சிக்கு வர வேண்டிய ரெயில், 7½ மணி நேரம் தாமதமாக இரவு 9.30 மணிக்கு வந்தது. ரெயிலில் குளிர்சாதன பெட்டி உள்பட 15 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன.

அதன்பிறகு பொள்ளாச்சியில் இருந்து 9.40 மணிக்கு ரெயில் புறப்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து 12–வது கிலோ மீட்டர் தூரத்தில் வளந்தாயமரம் அருகே 9.50 மணிக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தின் அருகே நின்ற பழமையான மரத்தின் ஒரு பகுதி முறிந்து தண்டவாளத்திலும், ரெயில் என்ஜின் மீதும் விழுந்தது.

தடம் புரண்டது


இதையடுத்து ரெயிலை டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தினார். அதற்கு பயங்கர சத்தத்துடன் ரெயில் என்ஜின் உள்பட முதல் 7 பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டது. இரவு நேரம் என்பதால் பெரும்பாலோனோர் தூங்கி கொண்டிருந்தனர். அவர்கள் மிகப்பெரிய விபத்து நடந்து விட்டது என்று காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். அந்த பகுதி இருள் சூழ்ந்த பகுதி என்பதால் பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். அதற்குள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து, பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

மாற்று ஏற்பாடு


இதுகுறித்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கும், பாலக்காடு ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று ஏற்பாடாக பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் நின்று இருந்த திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினை சம்பவ இடத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் ரெயிலின் பின்புறம் இருந்த மற்ற 8 பெட்டிகளை என்ஜினுடன் இணைத்து, அதில் பயணிகளை ஏற்றி பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

மேலும் பாலக்காடு ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சொரனூர் ரெயில் நிலையத்தில் இருந்து கிரேனை கொண்டு வந்தனர். இதற்கிடையில் மருத்துவ குழுவும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தண்டவாளம் சேதம்


பின்னர் நள்ளிரவே மரத்தை வெட்டி அகற்றினார்கள். அதை தொடர்ந்து நேற்று காலையும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. தண்டவாளத்தில் மரம் விழுந்து, சிறிது தூரம் இழுத்து சென்றதில், ஒரு சில இடங்களில் தண்டவாளம் 2–ஆக பிளந்து சேதமடைந்து இருந்தது. மேலும் சிமெண்டு ரீப்பர் கட்டைகளும் சேதமடைந்து விட்டன.

இதனால் ரெயிலை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்களை வரவழைக்கப்பட்டு, தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. இந்த பணியில் 300 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகளை தூக்கி நிறுத்த கிரேன் வரவழைக்கப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story