குடிநீர் வழங்கக்கோரி கரப்பாடியில் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி கரப்பாடியில் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 May 2017 3:15 AM IST (Updated: 17 May 2017 10:44 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி கரப்பாடியில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஏ.நாகூர் ஊராட்சிக்கு உட்பட்டது கரப்பாடி கிராமம். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கரப்பாடிக்கு அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வாரத்துக்கு 3 நாட்கள் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மேலும் அங்குள்ள 2 ஆழ்துளை கிணறுகள் மூலமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் கரப்பாடியில் உள்ள 2 ஆழ்துளை கிணறுகளில் ஒன்று தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டது. ஒரு ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. அதில் தண்ணீர் இருந்தும் போதிய அளவு குழாய்கள் அமைக்கப்படாததால் கிராமத்தின் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் வழங்க முடியவில்லை.

கிராம மக்கள் சாலை மறியல்


இதனிடையே அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் குடிநீர் வழங்க வில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி கரப்பாடியில் கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று திடீரென்று நெகமம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கலைந்து சென்றனர்


அப்போது அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வரும் குழாயில் ஒரு சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரி செய்தவுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படும். மேலும் கரப்பாடியில் 2 ஆழ்துளை கிணறுகளில் ஒரு ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றி விட்டது. மற்றொரு ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதில் சமரசம் அடைந்த கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக கரப்பாடி–நெகமம் ரோட்டில் நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரை 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story