காரியாபட்டியில் பள்ளி வாசல் அருகே டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது


காரியாபட்டியில் பள்ளி வாசல் அருகே டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது
x
தினத்தந்தி 18 May 2017 3:45 AM IST (Updated: 18 May 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டியில் பள்ளிவாசல் அருகே டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க கூடாது என்று கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

விருதுநகர்,

கலெக்டர் சிவஞானத்திடம் இதுதொடர்பாக கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

காரியாபட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி வாசல் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிவாசலின் தலைமையகம் மதுரையில் உள்ளது. பள்ளிவாசலில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவு கொடுத்து அவர்களுக்கு கல்வி புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளி வாசலின் உறுப்பினர்களாக 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.

டாஸ்மாக்

இந்த நிலையில் பள்ளி வாசல் அருகில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாக அறிகிறோம். இதனால் பள்ளி வாசல் உறுப்பினர்களும், பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வருபவர்களும், பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். மேலும் இந்த கடைக்கு அருகிலேயே சாய்பாபா கோவில், காளியம்மன் கோவில் ஆகிய வழிபாட்டு தலங்கள் உள்ளன. மேலும் அன்னதான கூடமும், தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு சொந்தமான மண்டபமும், பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளது. எனவே இந்த கடையால் வழிபாட்டு தலங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதோடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

கோரிக்கை

எனவே பள்ளி வாசல் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் டாஸ்மாக்கடை திறப்பதற்கு அனுமதி வழங்க கூடாது என வேண்டுகிறோம். மேலும் அரசு உத்தரவின்படி மாநில நெடுஞ்சாலையில் இருந்து குறிப்பிட்ட தொலைவில்தான் மதுக்கடை திறக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வரும் கடையானது மாநில நெடுஞ்சாலையின் மேல்புறத்திலேயே சட்ட விதிகளுக்கு புறம்பாக திறக்கப்படுகிறது. இதனால் இந்த கடையை திறக்க விடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story