அவமதிப்பு வழக்கு: தலைமை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


அவமதிப்பு வழக்கு: தலைமை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 18 May 2017 4:15 AM IST (Updated: 18 May 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டில் கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போய்விட்டது. இதனால் தொடர்ந்து நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. அணைகள், கண்மாய், குளங்கள் போன்ற நீர்நிலைகள் வறண்டு போய்விட்டன. இதனால் மாநிலம் முழுவதும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

குடிநீருக்கும் பஞ்சம் நிலவுகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு ஆழ்குழாய்கள், கிணறுகளில் தண்ணீர் எடுத்து தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றன. அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையை போக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். அதை பரிசீலித்ததாக தெரியவில்லை. எனவே குடிநீர் பஞ்சத்தை போக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

அரசாணை பிறப்பிக்க உத்தரவு

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கைகளை 15 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஆகியோர் சுற்றறிக்கை அல்லது அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவின்பேரில் இதுவரை சுற்றறிக்கையோ, அரசாணையோ பிறப்பிக்கப்படவில்லை. அதனால் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், என்.ஷேசஷாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

முடிவில், இந்த மனு குறித்து தலைமை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story