போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின
x
தினத்தந்தி 18 May 2017 3:30 AM IST (Updated: 18 May 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றதை அடுத்து, நேற்று வழக்கம் போல் கடலூர் மாவட்டத்தில் அரசு பஸ்கள் இயங்கின.

கடலூர்,

ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நேற்று முன்தினம் இரவு அறிவித்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து தொழிலாளர்களில் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்பவில்லை.

அரசு பஸ்கள் இயங்கின

இந்நிலையில் நேற்று காலை தான், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து தொழிலாளர்களும் வழக்கம் போல் பணிக்கு திரும்பினர். இதனால் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, அரசு பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த கடலூர் பஸ் நிலையம், நேற்று முதல் பரபரப்பாக காணப்பட்டது. கடலூர் பஸ்நிலையத்தில் வழக்கம் போல் வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் சென்றன. இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சிரமமின்றி சென்று வந்தனர். இதேபோல் விருத்தாசலம், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி என்று மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின

Next Story