தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி, ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி, ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 May 2017 11:30 PM GMT (Updated: 17 May 2017 7:19 PM GMT)

தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி என்று திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று இரவு நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். இதில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

ஜெயலலிதா

தமிழகத்தில் 27 ஆண்டுகள் ஆட்சி செய்யும் உரிமையை அ.தி.மு.க. பெற்றது. அ.தி.மு.க.வை எந்த குடும்பத்தின் கையிலும், தனிநபரின் கட்டுப்பாட்டிலும் சென்று விடாமல் தொண்டர்களின் இயக்கமாக எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அதன்பின்னர் பல்வேறு சோதனைகளில் இருந்து காப்பாற்றிய ஜெயலலிதா, 29 ஆண்டுகள் கட்சியை வழிநடத்தினார்.

மேலும் 14 லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சியை, 1½ கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியாக மாற்றினார். கட்சியையும், ஆட்சியையும் உயர்ந்த இடத்துக்கு ஜெயலலிதா கொண்டு சென்றார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய 3 தலைவர்களின் ஆற்றலுடன் தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களுக்காக ஆட்சி செய்தார்.

2 கோரிக்கைகள்

எதிர்பாராதவிதமாக அவர் மரணம் அடையும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. நாம் 2 கோரிக்கைகளை வைத்தோம். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களாட்சி நடத்தினார்கள். ஆனால், இன்று ஆட்சியும், கட்சியும் சசிகலா குடும்பத்தின் கையில் சிக்கும் நிலை. அதை தடுக்க வேண்டும். மேலும், 7½ கோடி தமிழக மக்களும், ஏன் இந்திய மக்களும் ஜெயலலிதா மரணத்தின் உண்மையை பற்றி அறிய வேண்டும்.

அவரின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும். அதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றோம். ஆனால், நீதிவிசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மறுக்கிறது. கட்சியையும், ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முன்வரவில்லை. ஏதேதோ நாடகங்களை நடத்தி மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். பல்வேறு விதமாக பேசி மக்களையும், தொண்டர்களையும் குழப்புகின்றனர்.

தொண்டர்கள் எங்கள் பக்கம்

எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க் கள், மாவட்ட செயலாளர்கள் அவர்களிடம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், தொண்டர்களும் மக்களும் எங்களிடம் இருக்கிறார்கள். எங்களுடைய 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றாதது ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலில் நான் உள்பட அ.தி.மு.க. வேட்பாளர்கள் எங்களுக்காக ஓட்டு கேட்கவில்லை.

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா வரவேண்டும் என்று ஓட்டு கேட்டோம். அவரும் தொகுதிகளுக்கு வந்து பிரசாரம் செய்தார். மக்கள் ஆதரவு அளித்து 32 ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்ட கட்சிக்கு, மீண்டும் ஆட்சி பொறுப்பை தந்தார்கள். ஆனால், தற்போது தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா அரசு அல்ல. மக்களின் பிரச்சினைகளை அவர்கள் தீர்க்கவில்லை.

ஜல்லிக்கட்டு

என்னை 2 முறை ஜெயலலிதா முதல்-அமைச்சராக ஆக்கினார். பின்னர் அவர் இல்லாத நேரத்திலும் நான் முதல்-அமைச்சரானேன். ஜெயலலிதா உருவாக்கிய அரசு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கவனமாக பணியாற்றினேன். வார்தா புயல் வந்த போது சிறப்பாக பணியாற்றினோம். ஜல்லிக்கட்டுக்கு தனியாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.

தமிழகத்தில் 2 பருவமழை தவறியதால், வறட்சி ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்து, சென்னைக்கு கிருஷ்ணாநதி நீரை கொண்டு வர ஆந்திர முதல்-மந்திரியை சந்தித்து பேசினேன். அதன்படி சென்னைக்கு தண்ணீர் கொண்டு வந்தோம்.

மக்கள் விரோத ஆட்சி

மக்கள் பிரச்சினைகளை எப்படி தீர்க்க வேண்டும் என்று ஜெயலலிதா எங்களுக்கு சொல்லி கொடுத்துள்ளார். ஆனால், தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசு, ஜெயலலிதாவின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசாக இல்லை. எம்.எல்.ஏ.க்கள், மக்கள் தனித்தனியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. அவர்கள் திருந்துவதாக இல்லை.

எங்களுடன் சமாதானம் என்றார்கள். அந்த குடும்பத்தை விலக்கி வைக்க சொன்னோம். இதுவரை அதை செய்யவில்லை. இணைப்புக்காக குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுக்களை கலைக்க வேண்டும் என்று மதுரையில் ஒருவர் சொல்கிறார். அவர் மேயராக இருக்கும் போது மதுரையிலேயே இருந்தது கிடையாது. அவ்வளவு பிரச்சினைகள். அவரெல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு போய்விட்டது.

மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது

ராஜன்செல்லப்பா பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் நின்றால் வெற்றிபெறுவாரா?. இணைப்பு இல்லாமல் போனால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. இதற்கிடையே மு.க.ஸ்டாலின் எப்படியும் முதல்-அமைச்சராகி விடவேண்டும் என்று கனவு காண்கிறார். அவருடைய கனவு பலிக்காது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நோக்கத்தை நாங்கள் நிறைவேற்றி காட்டுவோம். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது மு.க.ஸ்டாலின் சைக்கிளில் சென்றார், நடந்தார், சிமெண்டு தளம் போட்ட கரும்பு காட்டுக்கு போனார், டீக்கடையில் டீக்குடித்தார்.

என்ன செய்தாலும் அவருடைய கனவு பலிக்காது. நாங்கள் டீக்கடையே நடத்துகிறோம். அ.தி.மு.க.வை யாரும் அசைக்க முடியாது. தமிழகத்தில் மக்கள் சக்தியோடு, மீண்டும் ஜெயலலிதாவின் மக்களாட்சியை உருவாக்குவோம். ஒருவர் எனக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டு தருவதாக கூறுகிறார். யார்?, யாருக்கு பதவியை விட்டு தருவது. நான் ஜெயலலிதாவால் 2 முறை முதல்-அமைச்சர் பதவி பெற்றவன்.

தியாகம் செய்ய தயார்

மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எனவே, எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அவர்கள் டெபாசிட் இழப்பார்கள். தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் கையில் அ.தி.மு.க. சென்று விடாமல் அரணாக நின்று காப்போம். அ.தி.மு.க.வை தொண்டர்களின் இயக்கமாக காப்போம். புதிய சகாப்தம் படைப்போம். அ.தி.மு.க.வை கட்டிக்காப்பதற்கு எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்ய தயாராகி விட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இணைந்தனர்

முன்னதாக வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. தென்னம்பட்டி பழனிசாமி, நிலக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இருவரும் அ.தி.மு.க. பிளவுபட்டதில் இருந்து கட்சியின் எந்த அணியிலும் சேராமல் ஒதுங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, செம்மலை, க.பாண்டியராஜன், ராஜகண்ணப்பன், ஜெயபால், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story