புதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறியது: ஜூலை 1-ந்தேதி முதல் அமல்


புதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறியது: ஜூலை 1-ந்தேதி முதல் அமல்
x
தினத்தந்தி 18 May 2017 5:15 AM IST (Updated: 18 May 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபையில் ஜி.எஸ்.டி. சட்ட மசோதா (சரக்கு மற்றும் சேவை வரி) நிறைவேறியது. இந்த வரி விதிப்பால் பாதிப்பு ஏற்பட்டால் பரிகாரம் காணலாம் என்று முதல் அமைச்சர் கூறினார்.

புதுச்சேரி

புதுவை சட்டசபையில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச்சட்ட (ஜி.எஸ்.டி.) முன்வரைவினை (மசோதா) முதல்- அமைச்சர் நாராயணசாமி நேற்று தாக்கல் செய்தார். இதன் மீது எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் புதுவையில் ஒட்டுமொத்தமாக பாதிப்பினை ஏற்படுத்தும் என்று எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சரக்கு சேவை வரி தொடர்பான 10 கூட்டங்களில் நான் கலந்துகொண்டுள்ளேன். இதுதொடர்பாக 5 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மதுபானங்களுக்கு விலக்கு

அதாவது மத்திய சரக்கு சேவை வரி சட்டம், மாநில சரக்கு சேவை வரிசட்டம், மத்திய, மாநில அரசு சரக்கு சேவை வரி சட்டம், யூனியன் பிரதேச சரக்கு சேவை வரிசட்டம், நஷ்டஈடு சட்டம் ஆகியவைதான் அவை. இதில் மத்திய அரசின் கொள்கை ஒரே நாடு ஒரே வரி என்பதுதான். இந்த சட்டத்தில் மதுபானங்கள், பெட்ரோல், டீசல், கியாஸ் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மற்ற பொருட்களுக்கு இந்தியா முழுவதும் ஒரே விதமான வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என வரி விதிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாநில சட்டமன்றங்களில் ஜி.எஸ்.டி. சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு வருகிறது. நேற்று (நேற்று முன்தினம்) ஆந்திர மாநில சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநிலத்திற்கான உரிமை

சரக்கு சேவை வரி சட்டத்தில் புதுச்சேரியானது யூனியன் பிரதேசம் என்று குறிப்பிடப்படவில்லை. ஒரு மாநிலத்திற்கான உரிமையை பெறும் விதமாக மாநிலம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி ரூ.1.50 கோடி வரை வர்த்தகம் செய்வோரிடம் மாநில அரசு அதிகாரிகளே வரி வசூலிக்கும் அதிகாரம் உள்ளது. அதற்கு மேல் உள்ளவர்களிடம் மத்திய அரசு வரி வசூலித்து அதை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதன்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் 2 மாதத்திற்கு ஒருமுறை வரி நேரடியாக சென்று சேர்ந்துவிடும்.

நமக்கு இப்போது உள்துறை அமைச்சகத்தின் மூலமாக நிதி கிடைக்கப்பெற்று வருகிறது. இந்த சட்டம் மூலம் நேரடியாக நிதி அமைச்சகத்திடம் இருந்தே நிதி வந்துவிடும். அதற்குரிய அந்தஸ்தை நாம் பெற்றுள்ளோம். சரக்கு சேவை வரி தொடர்பான விவாதத்தின்போது உற்பத்தி அதிகம் உள்ள மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர் களும் தங்கள் மாநிலம் பாதிக்கப்படும் என்றனர்.

ஆனால் இதனால் முழுமையான பாதிப்பு என்ன? நன்மை என்ன? என்பது யாருக்கும் தெரியவில்லை. அதை நடைமுறைக்கு கொண்டு வந்த பிறகுதான் நன்மை, தீமைகள் குறித்த விவரங்கள் தெரியவரும்.

விலகி இருக்க முடியாது

பொருட்கள் எங்கு உற்பத்தியாகிறதோ அங்கு வரி விதிக்கப்படும். இதன் மூலம் வரி ஏய்ப்பு இருக்காது. இதில் நாம் விலகி இருக்கவும் முடியாது. அதை எதிர்க்கும் நிலையிலும் நாம் இல்லை. வியாபாரத்தை பெருக்க நாம் இதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த சரக்கு சேவை வரி அமலுக்கு வரும்போது அனைத்து மாநிலங்களுக்கும் சமமான அளவில் தொழிற்சாலைகள் வரும்.

இந்த வரியினை ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தும் சூழல் உள்ளது. அதை அமல்படுத்தும்போதுதான் யாருக்கு பலன்? என்று தெரியவரும். எந்தெந்த பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி விதிப்பது? என்பது தொடர்பான கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. மக்கள் பெருமளவு பயன்படுத்தும் 50 சதவீத உணவு பொருட்களுக்கு வரி இருக்காது என்று நிதி மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுவை மாநில வியாபாரிகளின் கருத்தையும் இதுதொடர்பாக கேட்டுள்ளோம். புதுவை மக்களின் நலன் கருதி நுகர்பொருட்களுக்கு குறைந்த வரியே நிர்ணயிக்க முயற்சி செய்வோம்.

பாதிப்புக்கு பரிகாரம்

சரக்கு சேவை வரி கவுன்சிலின் கூட்டம் 3 மாதத்துக்கு ஒருமுறை நடக்கும். அப்போது நமது பாதிப்புகளுக்கு பரிகாரம் காணலாம். சரக்கு சேவை வரி தொடர்பாக வியாபாரிகளுக்கு பயிற்சி கொடுத்துள்ளோம். நமது வியாபாரிகள் 80 சதவீதம் பேர் ஜி.எஸ்.டி. முறைக்கு வந்துள்ளனர். மீதமுள்ள 20 சதவீதம் பேரையும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வியாபாரிகளின் சந்தேகங் களுக்கு விளக்கமளிக்க கட்டணமில்லா தொலைபேசி வசதியும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

சொகுசு கார்கள் விற்பனை மூலம் ரூ.50 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அதன்மூலம் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது. 5 வருடங்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை பின்னர் முடிவு செய்யலாம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

நிறைவேறியது

அதைத்தொடர்ந்து இந்த சட்ட முன்வரைவு குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதைத்தொடர்ந்து சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்தார். 

Next Story