வெங்கல் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்


வெங்கல் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 18 May 2017 3:30 AM IST (Updated: 18 May 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

வெங்கல் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் மதுக்கடை இயங்கி வந்தது. கோர்ட்டு உத்தரவின்படி இந்த மதுக்கடை இங்கிருந்து அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக தாமரைப்பாக்கம்–திருநின்றவூர் நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் ஊராட்சி அருகே உள்ள பூசாலிமேடு பகுதியில் இந்த மதுக்கடையை திறக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இதனை அறிந்த பூசாலிமேடு, மாகரல், எடைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் புதிய கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தாமரைப்பாக்கம்–திருநின்றவூர் நெடுஞ்சாலையில் பூசாலிமேடு பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெங்கல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பரிபூரணம் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை கைவிட மாட்டோம்

அமணம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சரண்யா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று உறுதியுடன் கூறினர்.

டாஸ்மாக் அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வருவாய் ஆய்வாளர் கூறினார். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

வருவாய் ஆய்வாளர் உடனடியாக மாவட்ட டாஸ்மாக் அதிகாரியிடம் தொலைபேசியில் பேசினார். பொதுமக்களின் எதிர்பை மீறி கடையை திறக்கமாட்டோம் என்று அந்த அதிகாரி கூறியதாக வருவாய் ஆய்வாளர் பொதுமக்களிடம் கூறினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story