மதுராந்தகம் அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
மதுராந்தகம் அருகே மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு மதுக்கடை திறக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல முறை பொதுமக்கள் மதுராந்தகம்– சூனாம்பேடு சாலையின் குறுக்கே கற்களையும், கட்டைகளையும் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அரசு அதிகாரிகள், போலீசார் கடையை திறக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அந்த இடத்தில் தற்போது மீண்டும் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி பாரும் திறக்கப்பட்டுள்ளது.
முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்இதையடுத்து பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் தலைமையில் பா.ம.க. மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன், அமைப்பு செயலாளர் சரவணன், வக்கீல் சதீஷ், சபரி உள்ளிட்ட பா.ம.க.வினர், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மதுராந்தகம் தாசில்தார் கற்பகம், மதுராந்தகம் போலீசார் விரைந்து சென்று மதுக்கடை இனி இங்கு திறக்கப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.