சேலம் ஜங்சன் மேம்பாலம் அருகே இளம்பெண் எரித்துக்கொலை


சேலம் ஜங்சன் மேம்பாலம் அருகே இளம்பெண் எரித்துக்கொலை
x
தினத்தந்தி 18 May 2017 4:45 AM IST (Updated: 18 May 2017 3:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஜங்சன் மேம்பாலம் அருகே இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டார். போலீஸ் கமிஷனர் நேரில் விசாரணை நடத்தினார்.

சூரமங்கலம்,

சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அடுத்து ரெட்டிப்பட்டி மேம்பாலம் உள்ளது. பாலத்தின் இடது புறம் அப்பகுதியில் உள்ள இறைச்சி கடைக்காரர்கள் இறைச்சிக்கழிவுகளை கொட்டிச் செல்வது வழக்கம். மேலும் அப்பகுதியில் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. நேற்று முன்தினம் முதல் மேம்பாலம் அருகே இறைச்சிக்கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. குப்பையில் பிடித்த தீதான் எரிகிறது என அந்த வழியாக செல்வோர் பார்த்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை மேம்பாலம் அருகே மரங்கள் வளர்ந்த இடத்தில் சிலர் சென்றனர். அங்கு உடல் எரிந்த நிலையில் பிணம் ஒன்று கிடந்தது. ஒரு கை மற்றும் முகம் பாதி எரியாமல் இருந்தது. அதைப்பார்த்த அவர்கள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அது 20 வயதுடைய இளம்பெண் ஒருவரின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த பெண்ணின் தலைப்பகுதி அருகில் சூட்கேஸ் ஒன்றும் எரிந்து கிடந்தது. மேலும் சாக்குப்பை ஒன்று எரிந்ததற்கான அடையாளமும் இருந்தது.

போலீஸ் கமிஷனர் நேரில் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர் ஜோர்ஜி ஜார்ஜ், போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியன், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அங்கு எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இளம்பெண்ணை வேறு எங்கோ கொலை செய்து சாக்குப்பையில் கட்டி இங்கு கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பலாத்காரம் செய்து கொலை

பெண்ணின் ஒரு கை மற்றும் முகத்தின் பாதி மட்டும் எரியாமல் உள்ளதால், வெளியூரை சேர்ந்த இளம்பெண், இரவில் ரெயில் நிலையத்திற்கு கையில் சூட்கேசுடன் வந்தபோது, மர்ம கும்பல் அவரை கடத்தி பலாத்காரம் செய்துவிட்டு, அதன் பின்னர் கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கலாமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அந்த பெண் யார்? என தெரிந்தால் மட்டுமே முழுமையான விவரம் தெரியவரும் என்றும், இளம்பெண்ணின் பாதி எரிந்த நிலையில் கிடந்த முகத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்டு அடையாளம் காணும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாயமான பெண்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்தும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

முன்னதாக மேம்பாலம் அருகே இளம்பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அறிந்து மேம்பாலம் வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். எரிந்த உடலை பார்ப்பதற்காக மேம்பாலத்திலேயே இருசக்கர வாகனத்தை பலர் நிறுத்தி விட்டு வந்ததால், சேலம் இரும்பாலை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.


Related Tags :
Next Story