டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 May 2017 4:30 AM IST (Updated: 18 May 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

திருமானூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்துள்ள காரைபாக்கத்தில் சாலையோரம் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. இந்நிலையில் அந்த டாஸ்மாக் கடை பாளையபாடி சாலையில் ஒரு வயல் பகுதிக்கு மாற்றப்பட்டு, அங்கு இயங்கி வந்தது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால் பொதுமக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும், மாணவ-மாணவிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று திருமானூர் அருகே உள்ள மஞ்சமேடு மற்றும் காரைபாக்கம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மஞ்சமேடு, காரைபாக்கம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று டாஸ்மாக் கடையை மூடக்கோரி, டாஸ்மாக் கடையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமானூர் போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கைது செய்ய மினி பஸ் ஒன்றை கொண்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு கொடுக்கும் போலீசார், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக்கூறி கடையின் மீது கற்களை வீசினர். இதில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் கோவிந்தராஜன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தாசில்தார் கோவிந்தராஜன் இனி இந்த டாஸ்மாக் கடை இங்கு இயங்காது என்று உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story