குமரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின


குமரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின
x
தினத்தந்தி 18 May 2017 4:30 AM IST (Updated: 18 May 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின. பயணிகளும் எவ்வித தடையும் இன்றி பயணம் மேற்கொண்டனர்.

நாகர்கோவில்,

ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறைவான அளவிலேயே பஸ்கள் ஓடியதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளானார்கள். இதேபோல் குமரி மாவட்டத்திலும் பஸ் பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

இந்தநிலையில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., அண்ணா தொழிற்சங்கம் உள்பட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் ஒருமனதாக முடிவு எடுத்தனர். இதனால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் நாளை (அதாவது நேற்று) முதல் வழக்கம்போல் பஸ்கள் ஓடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வழக்கம்போல் பஸ்கள் ஓடின

இதையடுத்து நேற்று அனைத்து டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட அனைவரும் நாகர்கோவில் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பணிமனைகளுக்கும் பணிக்குத் திரும்பினர். இதனால் நேற்று அதிகாலையில் அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ் போக்குவரத்து முழுமையாக தொடங்கியது.

நாகர்கோவில் வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களில் இருந்தும் அதிகாலையிலேயே பஸ் போக்குவரத்து தொடங்கின. மேலும் கடந்த 3 நாட்களாக முடங்கிப்போய் இருந்த பஸ் போக்குவரத்து நேற்று சீரானது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் டவுன் பஸ் மற்றும் புறநகர் பஸ் போக்குவரத்து நடைபெற்றது. இதேபோல் திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சிவகாசி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரள பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து வழக்கம்போல் நேற்று நடந்தது. கேரள அரசு பஸ்களும் வழக்கம்போல் ஓடின.

சிரமமின்றி பயணம்

மினி பஸ்களும் வழக்கம்போல் இயங்கின. இதனால் பயணிகள் எவ்வித தடையுமின்றி, சிரமமின்றி நேற்று பஸ்களில் பயணத்தை தொடங்கினர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இன்று (நேற்று) அனைத்து டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவருமே பணிக்கு திரும்பி விட்டனர். இதனால் நாகர்கோவில் மண்டலத்தில் வழக்கம்போல் அனைத்து பஸ்களும் அதிகாலையில் இருந்தே இயங்கத் தொடங்கிவிட்டன” என்றார்.


Related Tags :
Next Story