டெல்லியில் 28 மாநில விவசாய சங்க தலைவர்களுடன் ஆலோசனை புறப்பட்டு சென்றார், அய்யாக்கண்ணு


டெல்லியில் 28 மாநில விவசாய சங்க தலைவர்களுடன் ஆலோசனை புறப்பட்டு சென்றார், அய்யாக்கண்ணு
x
தினத்தந்தி 19 May 2017 4:15 AM IST (Updated: 19 May 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் வருகிற 21-ந்தேதி 28 மாநில விவசாய சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்பதற்காக அய்யாக்கண்ணு திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

திருச்சி,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு. வழக்கறிஞரான இவர் தனது சங்கத்தை சேர்ந்த தமிழக விவசாயிகளுடன் சென்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், விவசாயிகள் வங்கியில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், தேசிய நதிகளை இணைக்க வேண்டும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி தொடர்ந்து 41 நாட்கள் பலவிதமான அறவழி போராட்டங்களை நடத்தினார்கள்.

நிர்வாண ஓட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகளை பிரதமர் நரேந்திரமோடி சந்திக்க மறுத்ததால் உச்சகட்டமாக போராட்ட குழுவை சேர்ந்த 3 விவசாயிகள் டெல்லி ராஜபாதையில் வேட்டி, சட்டை மற்றும் உள்ளாடைகளை அவிழ்த்து வீசி விட்டு நிர்வாணமாக ஓடினார்கள். இந்த சம்பவம் கடும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் பின்னரும் அவர்களது போராட்டம் தொடர்ந்த நிலையில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை சந்தித்து பேசினார். அப்போது தமிழக முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்து விவசாயிகள் தமிழ்நாட்டுக்கு புறப்பட்டு வந்தனர்.

மீண்டும் போராட்டம்

இந்நிலையில் அய்யாக் கண்ணு தலைமையில் 15 விவசாயிகள் நேற்று திருச்சியில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். ரெயிலில் ஏறுவதற்கு முன்பாக அய்யாக்கண்ணு நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் ‘டெல்லியில் வருகிற 21-ந்தேதி 28 மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க தலைவர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க நான் செல்கிறேன். இந்த கூட்டத்தில் ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் போராட்டம் நடத்துவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு அகில இந்திய அளவில் பல்வேறு விவசாய சங்கங்களின் ஆதரவு கிடைத்து இருக்கிறது. எனவே எங்கள் போராட்டம் வெற்றி பெறும்’ என்றார்.

Related Tags :
Next Story