ஆழித்தேர் ஓடும் 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டர் உத்தரவு


ஆழித்தேர் ஓடும் 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 19 May 2017 4:15 AM IST (Updated: 19 May 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ஆழித்தேர் ஓடும் 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான முன்னேற்பாடு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும், 29-ந்தேதி (திங்கட்கிழமை) ஆழித்தேர், அம்மன் மற்றும் சண்டிகேசுவரர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாக செய்ய வேண்டும். தேரோட்டத்துக்கு தகுந்தாற் போல் நகருக்குள் போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டும். தேரோட்டத்துக்கு முன்பு 2 நாட்கள், பின்பு 2 நாட்கள் திருவாரூர் நகர் பகுதியிலும், கோவில் மற்றும் கமலாலய குளக்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தேரோட்டத்தின்போது தேர் சக்கரங்களை சுற்றி பொதுமக்கள் வராமல் இருக்க கயிறு வளையம் அமைக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு தேரோட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும். நகராட்சி நிர்வாகம் ஆழித்தேர் ஓடும் 4 வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற வேண்டும். சுகாதாரமான குடிநீர், தேவையான இடங்களில் கழிவறை ஏற்பாடு செய்ய வேண்டும். துப்புரவு பணியாளர்கள் நியமித்து நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

சிறப்பு பஸ் வசதி

தீயணைப்புத்துறையினர் தேருக்கு அருகில் தீயணைப்பு வாகனம் ஒன்றை நிறுத்தி வைக்க வேண்டும். தேர் வீதிகளில் பவனி வரும்போது தேருக்கு பின்னால் அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் தொடர்ந்து வர வேண்டும். தடையின்றி நகர் மற்றும் கோவிலுக்கு மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரோடும் 4 வீதிகளிலும் சாலையின் மைய பகுதியை தெளிவுப்படுத்தும் வகையில் வெள்ளை கோடு மற்றும் வீல் மார்க்கிங்கை நெடுஞ்சாலைத்துறை செய்து தர வேண்டும். தேரோட்ட நாளில் சாலையின் குறுக்கே செல்லும் தொலைபேசி கம்பிகளை மாற்றி கொடுக்க வேண்டும். மாவட்ட மருத்துவமனையில் பகல், இரவு முழுவதும் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியாற்ற வேண்டும்.

தேரோட்ட நாளில் தாற்காலிக மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பஸ் வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அப்துல்லா, உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், கோவில் செயல் அதிகாரி பாரதிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story