குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 May 2017 4:15 AM IST (Updated: 19 May 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து ஊராட்சியில் ரெட்டியபட்டி, ரெண்டலபாறை, நல்லமநாயக்கன்பட்டி, தோட்டனூத்து ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் வறட்சி காரணமாக அந்த கிராமங் களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக நல்லமநாயக்கன்பட்டி, ரெட்டியபட்டி கிராமங்களுக்கு கடந்த 40 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறும் வறண்டுவிட்டது. எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

இருப்பினும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நல்லமநாயக்கன்பட்டி, ரெட்டியபட்டி கிராம மக்கள் நல்லமநாயக்கன்பட்டி பிரிவு அருகே காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் திண்டுக்கல்-நத்தம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முற்றுகை போராட்டம்

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதேபோல் திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிச்சாமி அங்கு வந்தார். அவர், பொதுமக்களை தோட்டனூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்தார்.

அதன்பேரில் அங்கு சென்ற பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர், முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதற்காக புதிதாக ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story