சேவுகமூர்த்தி அய்யனார் வெள்ளி தேரில் சந்திவீரன் கூடத்திற்கு சென்றார் பக்தர்கள் தரிசனம்


சேவுகமூர்த்தி அய்யனார் வெள்ளி தேரில் சந்திவீரன் கூடத்திற்கு சென்றார் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 19 May 2017 4:00 AM IST (Updated: 19 May 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி சேவுகமூர்த்தி அய்யனார் கோவில் வைகாசி திரு விழாவை தெரியப்படுத்தும் வகையில் சாமி வெள்ளி தேரில் பழமை வாய்ந்த சந்திவீரன் கூடத்திற்கு வந்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சேவுகமூர்த்தி அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 28-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது.

முன்னதாக வைகாசி தேர்த்திருவிழா நடைபெறுவதை அறிவிக்கும் வகையில் சிங்கம்புணரி மேலூர் ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த சந்தி வீரன் கூடத்திற்கு திருவிழாவிற்கு 10 நாட்களுக்கு முன்பாக சாமி புறப்பாடாகி, அங்கு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இதற்காக ஐந்து நிலை நாடு சிங்கம்புணரியில் பழமைவாய்ந்த கட்டிடங்களில், குறிப்பாக பழங்காலத்தில் நாட்டார்கள், கிராம பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடும் பொது இடம் என்று அழைக்கப்படும் சந்திவீரன் கூடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவடைந்து சந்திவீரன் கூடம் திருவிழாவையொட்டி தயாரானது.

சாமி தரிசனம்

இந்தநிலையில் நேற்றிரவு சேவுகமூர்த்தி அய்யனார் வெள்ளி தேரில் கோவிலில் இருந்து புறப்பட்டு கீழக்காட்டு சாலை வழியாக சந்திவீரன் கூடத்தை வந்தடைந்தார். இதனைத்தொடர்ந்து சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சாமி, நேற்று முதல் வருகிற 28-ந்தேதி வரை சந்திவீரன் கூடத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனையடுத்து 28-ந்தேதி சாமி புறப்பாடாகி மீண்டும் கோவிலுக்கு வெள்ளி தேரில் சென்றடைவார். பின்னர் காப்பு கட்டப்பட்டு வைகாசி திருவிழா தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 1-ந்தேதி திருக்கல்யாணமும், முத்தாய்ப்பாக 5-ந்தேதி தேரோட்டமும், 6-ந்தேதி பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி கிராமத்தார்கள், நாட்டார்கள் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story