போலியாக தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கிய 5 பேர் கைது


போலியாக தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2017 4:13 AM IST (Updated: 19 May 2017 4:15 AM IST)
t-max-icont-min-icon

போலியாக தொலைதொடர்பு நிறுவனம் தொடங்கி அரசுக்கு ரூ.30 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

போலியாக தொலைதொடர்பு நிறுவனம் தொடங்கி அரசுக்கு ரூ.30 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.17½ லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புகார்

தானே மாவட்டம் பிவண்டியில் சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பெற்று சிம்கார்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த புகார் தொடர்பாக சுபியா அன்சாரி என்பவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாக மாற்றி அரசுக்கு ரூ.30 கோடி அளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

5 பேர் கைது

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், அவருடன் தொடர்புடைய இக்பால் அகமது, முகமத் அஸ்லம், யூனிஸ் இம்தியாஸ் உள்பட 4 பேர் சிக்கினர். இவர்களிடம் இருந்து 18 தொலைத்தொடர்பு சாதனங்கள், 9 ரவுட்டர்கள், 2 மடிக்கணினிகள், 5 செல்போன்கள், கேபிள் வயர்கள், 420 சிம்கார்டுகள் போன்றவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.17 லட்சத்து 54 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் போலியாக தொடங்கிய தொலைத்தொடர்பு நிறுவனம் மூலம் ஹவாலா பணபரிமாற்றம் செய்யப்பட்டதா?, தீவிரவாத செயல்கள் அரங்கேற்றப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story