விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை விரைவில் கட்டப்படும்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செட்டிப்பட்டு கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
திருக்கனூர்,
புதுச்சேரி மாநிலம் ஹேண்ட்பால் சங்கம் சார்பில் தென் மண்டல அளவிலான ஹேண்ட்பால் சேம்பியன் ஷிப்போட்டிகள், திருக்கனூர் சுப்பிரமணியபாரதி மேல்நிலைப்பள்ளி வளாக திடலில் நடைபெற்றது. இதில் 7 மாநிலங்களை சேர்ந்த ஆண், பெண் அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகள் நிறைவு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் மாலை திருக்கனூர் சுப்பிரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். புதுச்சேரி அமெச்சூர் ஹேண்ட்பால் சங்க பொதுச் செயலாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் சம்பத் வரவேற்றார். பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்தழகன் வாழ்த்தி பேசினார்.
படுகை அணை கட்டப்படும்விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி தமிழக அணிகளுக்கு பரிசுக்கோப்பைகளை வழங்கினார்கள். இந்த விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
இந்த விழாவில் எனக்கு முன்பு பேசிய மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம் மாற்றுக்கட்சிக்காரராக இருந்தாலும், இந்த ஆட்சியை ஆதரிக்கிறார். இதற்கு காரணம் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு கட்சி பாகுபாடின்றி அனைத்து தொகுதிகளுக்கும் நலத்திட்டங்களை சரிசமமாக வழங்கி வருகிறோம். அதுபோல் மண்ணாடிப்பட்டு தொகுதி மக்களுக்கும் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதால் டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. இந்த ஆட்சியை பாராட்டுகிறார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செட்டிப்பட்டு கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டிக்கொடுக்கப்படும். விரைவில் அந்த பணி தொடங்கும். இதன் மூலம் குடிநீர் ஆதாரம் பெருகுவதுடன், விவசாயிகளும் பயன் அடைவார்கள்.
அதேபோல் திருக்கனூர் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலைப்பள்ளியாக மாற்றப்படும். மேலும் அந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்கப்படும். அந்த பணியும் இந்த ஆண்டே தொடங்கப்படும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
முதல்–அமைச்சரை பாராட்டிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.இந்த விழாவில் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம் பேசும்போது முதல்–அமைச்சர் நாராயணசாமியை வெகுவாக பாராட்டினார். அவர் பேசியதாவது:–
இந்த பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான செட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட உத்தரவிட்ட முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நல்லது செய்பவர்களை எங்கு வேண்டுமானாலும் வாழ்த்தலாம். அதேபோல் இங்குள்ள அரசு பள்ளிக்கு சொந்த கட்டிடம் இல்லாமல் திருமண மண்டபத்தில் இயங்கி வருகிறது. பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆனால் தற்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உடனடியாக தேர்வு செய்து, இந்த ஆண்டே அந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டவும், அந்த அரசு பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவும் உத்தரவிட்டதற்காகவும், மண்ணாடிப்பட்டு தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி தருவதாக உறுதி கூறிய முதல்–அமைச்சருக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.