மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த ஜோதிடருக்கு 10 ஆண்டு சிறை


மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த ஜோதிடருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 30 May 2017 10:00 PM GMT (Updated: 2017-05-31T00:17:53+05:30)

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஜோதிடருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த சென்னாலூர் கிராமத்தை சேர்ந்த 45 வயது பெண் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தார். இவருடைய கணவர் சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்ததால் அந்த பெண் தனது மாமியாருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 21–4–15 அன்று மதியம் அந்த பெண் தனது வீட்டில் தனியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் ஜோதிடரான தர்மலிங்கம் (34) என்பவர் அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக குளியல் அறைக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்தார்.

ஜோதிடருக்கு 10 ஆண்டு சிறை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலியட் புஷ்பா, குற்றம் சாட்டப்பட்ட தர்மலிங்கத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில், பலாத்கார குற்றத்திற்காக தர்மலிங்கத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த குற்றத்திற்காக 3 ஆண்டு சிறையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்ற குற்றத்திற்காக ஓராண்டு சிறையும், ரூ.ஆயிரம் அபராதமும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதாவது தர்மலிங்கம் மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜோதிடர் தர்மலிங்கம், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அல்போன்சா ஆஜரானார்.


Next Story