பா.ம.க.வுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும்


பா.ம.க.வுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 30 May 2017 11:30 PM GMT (Updated: 30 May 2017 7:07 PM GMT)

பா.ம.க.வுக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கோவையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

கோவை

பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று கோவை வந்தார். அவர் கோவை–திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கடந்த 60 ஆண்டுகளில் 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய் விட்டன. ஆனால் ஒருவர் தூர் வாருகிறேன் என்று தமிழகத்தை சுற்றி வருகிறார். கோவை, திருப்பூர் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது. அதற்கு தீர்வு காண தமிழக அரசால் முடியவில்லை. குடிநீர், விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு முன்வராமல் மூடிய டாஸ்மாக் மதுக்கடை களை திறக்க ஆர்வம் காட்டி வருகிறது. டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதை விட ‘நீட்’ தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீனவர் பிரச்சினை போன்ற முக்கிய பிரச்சினைகளில் தமிழக அரசு கவனம் செலுத்துவதில்லை. மக்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. எனவே மக்கள் ஒரு மாற்றத்தை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

மாட்டு இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது குறித்து தமிழக முதல்– அமைச்சர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயி வளர்த்த மாட்டை அவர் விற்க உரிமை உள்ளது. அதற்காக 5 சான்றிதழ்கள் வாங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது ஏமாற்றக்கூடியது.

ஆதரவு தெரிவிக்க வேண்டும்

நரேந்திரமோடி நல்ல திட்டங்கள் கொண்டு வருவார் என்ற தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளார். இது தவறு. இந்தியா சைவ நாடு என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள். சைவம் சாப்பிடுபவர்கள் மட்டும் இந்தியாவில் இருங்கள். மற்றவர்கள் வெளிநாடு செல்லுங்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஒருவர் இந்த உணவை தான் சாப்பிட வேண்டும் என்று மத்திய அரசு சொல்கிறது. இதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

நாங்கள் நல்ல நிர்வாகி என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த் எங்களுக்கு ஆதரவு கொடுக்கலாமே. தமிழ்நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு நடிகரால் தீர்வு காண முடியாது. நல்ல நிர்வாகியால் தான் தீர்வு கொண்டு வர முடியும். எங்களை போன்ற நல்ல அனுபவம் வாய்ந்த நிர்வாகி தான் தேவை. கடந்த காலங்களில் தமிழர்கள் நடிகர்களுக்கு வாக்களித்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இனி நடிகர்கள் தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை. போதும். நிறுத்திக் கொள்ளுங்கள். ஒருவர் அரசியலுக்கு வருகிறாரா? வரவில்லையா? என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

வரவேற்கத்தக்கது

தமிழகத்தில் தனியார் பால் பண்ணைகளில் கலப்படம் நடப்பதாக தெரிந்தால் அதை மூடியிருக்க வேண்டும். ஆனால் அமைச்சர் அதை செய்யாமல் இருப்பது ஏன்?. 2011–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அடுத்த 6 ஆண்டுகளில் மட்டும் கடன் ரூ.3 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இதற்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சியில் இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கியது தான்.மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கடும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் தங்கவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் செந்தில் ஆறுமுகம், ஜான்லியோ, வசந்தகுமார், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.


Next Story