குளிர்சாதன வசதி பெட்டியில் பயணம் செய்து ரெயில் பயணிகளிடம் திருடிய வடமாநில ஆசாமிகள் 5 பேர் கைது


குளிர்சாதன வசதி பெட்டியில் பயணம் செய்து ரெயில் பயணிகளிடம் திருடிய வடமாநில ஆசாமிகள் 5 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2017 10:15 PM GMT (Updated: 30 May 2017 7:07 PM GMT)

குளிர்சாதன வசதி பெட்டியில் பயணம் செய்து, ரெயில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை,

ரெயிலில் குளிர்சாதன வசதி பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளின் பணம், நகைகள் அடிக்கடி திருட்டு போனது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யுமாறு ரெயில்வே சூப்பிரண்டு பி.விஜயகுமார் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து கோவை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ரெயில் பயணிகளின் பொருட்களை திருடிய வடமாநில ஆசாமிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் விவரம் வருமாறு:–

1.குல்தீப்சிங் (வயது29), 2.சுசில்குமார் (30), 3.ரவிச்சந்திரன் (48), 4.சுனில்குமார் (34). இவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். 5.நரேந்தர் (38) டெல்லி. இவர்களிடம் இருந்து 5 பவுன் தங்க நகை, ரூ.74 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

செல்போன்கள் பறிமுதல்

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த திருட்டு தொடர்பாக பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. குளிர்சாதன வசதி உள்ள ரெயில் பெட்டியில் அதிகாரிகள், பணக்காரர்கள் பயணம் செய்வார்கள் என்பதால் அவர்களை குறிவைத்து இந்த திருட்டு கும்பல் செயல்பட்டுள்ளது. இதற்காக போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி முன்பதிவு செய்து குளிர்சாதன வசதி பெட்டியில் பயணம் செய்துள்ளனர். பயணிகள் தூங்கும்போது அவர்களின் பொருட்களை திருடிச்சென்று விடுவார்கள்.

கைதான 5 பேரிடம் இருந்தும் 17 ரெயில்களில் பயணம் செய்ததற்கான முன்பதிவு டிக்கெட்டுகள், போலியான அடையாள அட்டைகள், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான ஆசாமிகள் கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் ரெயில் பயணிகளிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

கைதான 5 பேரும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story