தினமும் 30 ஆயிரம் லிட்டர் வீதம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தண்ணீர் வழங்க வேண்டும்


தினமும் 30 ஆயிரம் லிட்டர் வீதம் அரசு தலைமை மருத்துவமனைக்கு தண்ணீர் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 30 May 2017 10:30 PM GMT (Updated: 2017-05-31T00:51:28+05:30)

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் 30 ஆயிரம் லிட்டர் வீதம் தண்ணீர் வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்துக்கு கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். இதுபோக, தினமும் சுமார் 600 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சையில் இருக்கிறார்கள். இவர்களின் உபயோகத்துக்கு 1¼ லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை சமாளிக்க மருத்துவமனையில் ஒரு கிணறும், 8 ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

கோடை காலமான தற்போது, 7 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. கிணற்றில் மண் சரிந்து விழுந்ததால் சுமார் 15 அடி உயரம் வரை மண் மேவி விட்டது. இதனால், தினமும் சுமார் 22 ஆயிரம் லிட்டர் மட்டுமே பெறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

கலெக்டர் உத்தரவு

இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதை பார்த்த கலெக்டர் டி.ஜி.வினய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு, நேற்று திடீரென அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தார். அங்குள்ள கிணறு, ஆழ்துளை கிணறுகளை பார்வையிட்டார். தண்ணீர் தட்டுப்பாடு பற்றி அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். பிறகு, குழந்தைகள் வார்டையும் அவர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, தினமும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை அரசு தலைமை மருத்துவமனைக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என அவர் உத்தரவு பிறப்பித்தார்.

இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறும்போது, ‘தலைமை மருத்துவமனையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை பார்வையிட்ட கலெக்டர் டி.ஜி.வினய், தினமும் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொடுக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதன் மூலம் நோயாளிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்திட முடியும். மழை பெய்து மீண்டும் நீர் ஆதாரங்கள் மேம்படும் வரை இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்’ என்றனர்.


Next Story