சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாவட்ட வருவாய் அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை


சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாவட்ட வருவாய் அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 May 2017 10:00 PM GMT (Updated: 30 May 2017 7:48 PM GMT)

சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாவட்ட வருவாய் அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தென்றல் நகர் அத்தாணி ரோட்டில் டாஸ்மாக் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை திறக்கப்பட உள்ள இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் தென்றல் நகரில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தென்றல்நகர், காலனி பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு ஜமாபந்தி முகாம் நடந்து கொண்டு இருந்தது. முகாமில் மக்களின் குறைகளை கேட்டுக்கொண்டு இருந்த மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீசிடம், தென்றல்நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

முற்றுகை

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ், பதில் எதுவும் கூறாமல் ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார். எனினும் பொதுமக்கள் தாலுகா அலுவலக வளாகத்திலேயே 1½ மணி நேரம் காத்திருந்தனர். முகாம் முடிந்த பிறகு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் அங்கிருந்து புறப்பட்டு காரில் ஏறி புறப்பட முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு, டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், அவரை சூழ்ந்து கொண்டு காரில் ஏறவிடாமல் தடுத்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி, காரில் ஏறாமல் அங்கிருந்து நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து பொதுமக்களும் நடக்க தொடங்கினார்கள். நகராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றபோது மாவட்ட வருவாய் அதிகாரி சதீசின் அருகில் அவருடைய கார் வந்து நின்றது. உடனே அந்த காரில் ஏறி மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சாலை மறியல்

மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் உரிய விளக்கம் அளிக்காமல் காரில் கிளம்பி சென்றதை கண்டதும் பொதுமக்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அனைவரும் நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சத்தியமங்கலம்–மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைப்பட்டது. இருபக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் கூறுகையில், ‘‘ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் லியாகத் மாலையில் சத்தியமங்கலம் வர இருக்கிறார். பிரச்சினையில் உள்ள கடைகள் குறித்து அவர் பார்வையிட உள்ளார். எனவே அவரிடம் உங்களுடைய கோரிக்கையை தெரிவியுங்கள். உரிய நடவடிக்கை எடுப்பார்’’, என்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் சத்தியமங்கலத்தில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்த 50 பெண்கள் உள்பட 100 பேர் நேற்று பகல் 12 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வாய்க்கால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்களிடம் அவர்கள் கூறும்போது, ‘மறியலில் ஈடுபட முயன்றால் அனைவரையும் கைது செய்வோம்’ என்றனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் முயற்சியை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் புகழேந்தியிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தார்கள்.

சத்தியமங்கலம் அருகே கொண்டப்பநாயக்கன்பாளையத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடையை அகற்றக்கோரி கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றார்கள். உடனே சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.


Next Story