சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் பசுவதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் பசுவதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது
x
தினத்தந்தி 30 May 2017 10:30 PM GMT (Updated: 2017-05-31T01:18:56+05:30)

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் பசுவதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எச்.ராஜா கூறினார்.

ஈரோடு,

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று ஈரோடு வந்தார். அப்போது மாவட்ட பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தான் பசுவதை தடுப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. அரசியல் சட்டத்தில் என்ன கூறப்பட்டு உள்ளது? மத்திய அரசின் சட்டத்தில் என்ன கூறப்பட்டு உள்ளது? என்பது தெரியாமல் பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. இது தெரியாமல் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்துவதாக அறிவித்து உள்ளார். இந்த போராட்டம் சட்ட விரோதமானது. அவர் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே மத்திய அரசுக்கு எதிராக நடத்தும் போராட்டங்கள் அனைத்தும் முழுமையான விவரம் தெரியாமல்தான் நடத்தி இருக்கிறார். அதுபோல் பசுவதை தடுப்புக்கு எதிரான போராட்டத்தையும் நடத்த இருப்பதாக அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் லாரிகளில் கொண்டு செல்லும் பசுக்களை தடுப்பது தொடர்பான சட்டம் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு கூட சரியாக தெரியவில்லை.

மிருகவதை தடுப்பு சட்டம் என்பது மாட்டு இறைச்சி சாப்பிடுவதை தடுக்கும் சட்டம் அல்ல. அரசியல் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கையை இங்கு பலரும் அரசியலாக்குகிறார்கள். இந்த நடவடிக்கை என்பது இந்துத்வா கொள்கையை புகுத்துவதற்காகவோ, காவிமயத்தை புகுத்துவதற்காகவோ, மதரீதியான செயல்பாடோ அல்ல. பசுவதை கூடங்களுக்கு 3 ஆயிரம் பேர் உரிமம் பெற்றிருக்கிறார்கள் என்றால் 30 ஆயிரம் பேர் வதை செய்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில் கூட பசு, ஒட்டகம் வெட்ட தடை இருக்கிறது.

பாலில் கலப்படம்

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் சமீபத்தில் ஒரு உண்மையை கூறி இருக்கிறார். அதாவது, பாலில் கலப்படம் செய்யப்படுகிறது என்பது. அது உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்புவரை திருமண விசே‌ஷம் என்றால்கூட கூடுதல் பால் எங்கும் கிடைக்காது. ஆனால் தற்போது தடையில்லாமல் பால் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியம்? கோயா, சோப்பு பவுடர், யூரியா மூலம் கலப்பட பால் தயாரிக்கப்படுவதால் தடையில்லாமல் வினியோகம் செய்யப்படுகிறது.

பா.ஜனதா அரசு கொண்டு வந்த சட்டத்தை எப்படி அமல்படுத்த வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். மிரட்டல்கள் எல்லாம் எடுபடாது.

ஐ.ஐ.டி.

சென்னை ஐ.ஐ.டி.யில் மாட்டு இறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. ஒரு கல்வி நிறுவன வளாகத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் நடத்துவற்கு ஆதரவு அளிப்பது கண்டனத்துக்கு உரியது. இது தொடர்ந்தால் ஐ.எஸ். தீவிரவாதிகளின் புகலிடமாக ஐ.ஐ.டி. மாறிவிடும். எனவே போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய டீன் சிவக்குமார் மற்றும் மாணவர்கள் மீது ‘சஸ்பெண்டு’ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் ஒரு தீவிரவாத இயக்கத்தை நடத்தி வருகிறார். அவரது இயக்கம் ‘நக்சலைட்’ இயக்கம் என்பதால்தான் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர் கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட தலைவர் பொன்.ராஜேஸ்குமார், செய்தி தொடர்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story