மாட்டு இறைச்சிக்கு தடை விதித்து நாட்டில் மத, சாதி ரீதியாக பிரச்சினைகளை பா.ஜ.க. கிளப்புகிறது


மாட்டு இறைச்சிக்கு தடை விதித்து நாட்டில் மத, சாதி ரீதியாக பிரச்சினைகளை பா.ஜ.க. கிளப்புகிறது
x
தினத்தந்தி 30 May 2017 10:30 PM GMT (Updated: 2017-05-31T01:32:43+05:30)

மாட்டு இறைச்சிக்கு தடை விதித்து நாட்டில் மத, சாதி ரீதியாக பிரச்சினைகளை பா.ஜ.க. கிளப்புகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

காரைக்குடி

காரைக்குடியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வந்திருந்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் மக்களை திசை திருப்புதற்காக தான் பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர். மத, சாதி ரீதியாக பிரச்சனைகளை பா.ஜ.க அரசு கிளப்புகிறது. அதன் ஒரு பகுதி தான் மாட்டு இறைச்சிக்கு தடை. மாட்டு இறைச்சிக்கு விதித்த தடையை திரும்ப பெறவில்லை எனில் நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும். மத்திய அரசின் மாட்டி இறைச்சி தடை ஆதரவா, எதிர்ப்பா என்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தமிழக உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டு மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.

கட்ட பஞ்சாயத்து

தமிழக முதல்–அமைச்சர் நேரடியாக சென்று பிரதமரை சந்தித்து முறையிட்டும், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய வறட்சி நிவாரணம், மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி என எதுவும் இதுவரை வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் அ.தி.மு.க.வின் பிளவுகளை சாதகமாக்கி பா.ஜ.க. கட்ட பஞ்சாயத்து செய்து தமிழகத்தில் காலூன்ற முயற்சி செய்கிறது. மத்திய அரசு தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சோதனையில் எந்த மேல் நடவடிக்கையும் இல்லை.

வருமானவரிதுறையின் மூலம் மத்திய அரசை எதிர்ப்பவர்களை பணியவைக்கும் நடவடிக்கை தான் சோதனைகள். நீண்ட காலமாக தனியார் பாலில் இருக்கும் கலப்படத்தை இவ்வளவு காலம் கண்டுகொள்ளாமல் இருந்த அமைச்சர், இப்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்பது ஏன். அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story