திருச்சி–திண்டுக்கல் இடையே இரட்டை அகலபாதை பணிக்காக ரெயில்போக்குவரத்தில் மாற்றம்


திருச்சி–திண்டுக்கல் இடையே இரட்டை அகலபாதை பணிக்காக ரெயில்போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 30 May 2017 10:15 PM GMT (Updated: 30 May 2017 8:14 PM GMT)

திருச்சி–திண்டுக்கல் இடையே இரட்டை அகலபாதை பணிக்காக ரெயில்போக்குவரத்தில் மாற்றம் வருகிற 7–ந் தேதி வரை அமலில் இருக்கும்

மதுரை,

திருச்சி–திண்டுக்கல் ரெயில்பாதையில் மணப்பாறை–கல்பட்டிசத்திரம் இடையே இரட்டை அகல ரெயில்பாதை பணிக்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் வருகிற 7–ந் தேதி வரை திண்டுக்கல், கரூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படுகிறது. இதனால் இந்த ரெயில் திருச்சி ரெயில்நிலையத்துக்கு சுமார் 1¾ மணி நேரம் தாமதமாக வந்து சேரும்.

நாகர்கோவில்–மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை(வியாழக்கிழமை) திண்டுக்கல், கரூர் வழியாக திருச்சி சென்றடையும். இதனால் இந்த ரெயில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு வழக்கமான நேரத்தை விட சுமார் 2 மணி நேரம் தாமதமாக செல்லும்.

ஸ்ரீமாதா வைஷ்ணவ்தேவி கத்ரா–நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கச்சிகுடா(ஐதராபாத்)–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை ஒரு நாள் மட்டும் கரூர், திருச்சி வழியாக திண்டுக்கல் வருவதற்கு பதிலாக கரூரில் இருந்து நேரடியாக திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்து சேரும்.

சென்னை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) வருகிற 7–ந் தேதி மட்டும் திருச்சி, கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை வந்து சேரும். இதனால் இந்த ரெயில் நெல்லை ரெயில்நிலையத்துக்கு சுமார் 1¾ மணி நேரம் தாமதமாக சென்றடையும்.

அதேபோல மயிலாடுதுறை–நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56821/56822) இன்று முதல் வருகிற 7–ந் தேதி வரை திருச்சி–திண்டுக்கல் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Next Story